×

குமரியில் மேலும் ஒரு இன்ஸ்பெக்டருக்கு கொரோனா காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிப்பு

நாகர்கோவில், ஏப்.12: குமரி மாவட்டத்தில் காவல்துறையினரையும் கொரோனா அச்சுறுத்தி வருகிறது. சென்னையில் இருந்து பிரதமர் மோடி பாதுகாப்புக்கு வந்த ஏடிஎஸ்பி ஒருவர் தொற்றால் பாதிக்கப்பட்டு, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். சிகிச்சைக்கு பிறகு அவர் தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். குமரி மாவட்டத்தைச் சேர்ந்த போலீசார் சிலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் நாகர்கோவில் கோட்டார் காவல் நிலைய இன்ஸ்பெக்டருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.  இரண்டு நாட்களாக காய்ச்சல் பாதிப்பு இருந்ததை தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் விடுமுறையில் ஊருக்கு சென்றார். அங்கு அவருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக நெல்லையில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இன்ஸ்பெக்டருக்கு கொரோனாபாதிப்பு ஏற்பட்டதையடுத்து நாகர்கோவில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் மாதவன் பிள்ளை தலைமையிலான குழுவினர் நேற்று கோட்டார் போலீஸ் நிலையத்திற்கு சென்று மற்ற போலீசாருக்கு சளி மாதிரி எடுத்தனர். போலீஸ் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. ஏற்கனவே கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் ஒருவருக்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Kumari ,Corona police station ,
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு அணைகள்...