×

10 ரூபாய் சாம்பாருக்காக ₹5000 அபராதம் விதிப்பு: காஞ்சிபுரத்தில் போலீஸ் விதிமீறல்

காஞ்சிபுரம், ஏப்.12: காஞ்சிபுரத்தில் 10 ரூபாய்க்கு சாம்பார் கொடுக்கவில்லை என்பதாற்காக  ஹோட்டலுக்கு ரூ.5000 அபராதம் விதித்த போலீசாரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் எதிரில் பிரபல தனியார் ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இந்த ஓட்டலுக்குச் சென்ற இன்ஸ்பெக்டரின் ஜீப் டிரைவர் ஒருவர் ரூ.10க்கு சாம்பார் கேட்டுள்ளார். ஓட்டல் ஊழியர்கள் ரூ.10க்கு சாம்பார் வழங்க இயலாது என தெரிவித்துள்ளனர். இதனால் ஹோட்டல் ஊழியர்களுக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மறுநாள் அதே ஹோட்டலுக்கு வந்த சப் இன்ஸ்பெக்டர் ஹோட்டலில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கவில்லை எனக்கூறி ரூ.500 அபராதம் விதிப்பதாக தெரிவித்துள்ளார்.

 அப்போது அங்கு வந்த ஜீப் டிரைவர் 10 ரூபாய்க்கு சாம்பார் கேட்டா கொடுக்கல, இந்த ஹோட்டலுக்கு எல்லாம் ரூ.500 அபராதமா 5 ஆயிரம் போடுங்க என்றதும் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்துள்ளார். கொரோனா தொற்றால் தொழில் பாதிப்பு ஏற்பட்டு தொழிலாளர்கள் மற்றும் ஓட்டல் நிர்வாகம் அவதிப்பட்டு நிலைமை ஓரளவு சீரடைந்து வந்த நிலையில் இரண்டாம் அலை தற்போது அச்சுறுத்தி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த வருவாய்த்துறை, உள்ளாட்சி அமைப்புகள், காவல்துறை இணைந்து செயல்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் போலீஸ் கையில் அதிகாரம் உள்ளதால் தன்னிச்சையாக, விதிமீறலில் ஈடுபடுகின்றனர் என்று சமூகஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் சம்பந்தப்பட்ட போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வியாபாரிகள் சங்கம் சார்பில் இன்று காஞ்சிபுரம் போலீஸ் எஸ்பியிடம் புகார் அளிக்க உள்ளனர்.

Tags : Kanchipuram ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...