×

கோவை மாவட்டத்தில் 42 இடங்களில் ஆய்வு

கோவை, ஏப்.10: கோவை மாவட்டத்தில் பொது மக்களிடையே கொரோனா நோய் தொற்று எதிர்ப்பாற்றல் உருவாகியிருப்பது குறித்து 42 இடங்களில் சுகாதாரத் துறையினர் இரண்டாம் கட்ட ஆய்வினை துவங்கி உள்ளனர்.
சுகாதாரத் துறை சார்பில் பொது மக்களில் எந்த அளவிற்கு கொரோனா நோய் தொற்று எதிர்ப்பாற்றல் உருவாகியுள்ளது என்பது குறித்த இரண்டாம் கட்ட ஆய்வு கடந்த வியாழக்கிழமை முதல் துவங்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் செல்வபுரம், சாய்பாபா காலனி, நஞ்சுண்டாபுரம்,  விளாங்குறிச்சி ஆகிய பகுதிகளில் தலா  2 இடங்கள், பட்டுநூல் சந்து,  சீரநாயக்கன்பாளையம், செளரிபாளையம், நீலிக்கோணாம்பாளையம் ஆகிய பகுதிகளில்  தலா ஒரு இடம் என மொத்தம் 12 இடங்கள், வால்பாறை நகராட்சியில் ஒரு இடம்,  பொள்ளாச்சியில் 2 இடங்கள், மேட்டுப்பாளையத்தில் 7 இடங்களிலும்,  பேரூராட்சிகளில் கோட்டூரில் 3 இடங்கள், சூலேஸ்வரன்பட்டியில் 2 இடங்கள்,  ஆனைமலை, கருமத்தம்பட்டி, செட்டிப்பாளையம், ஒத்தக்கால்மண்டபம், சூலூர்,  ஜாமீன் ஊத்துக்குளி ஆகிய பேரூராட்சிகளில் தலா ஒரு இடம், சிக்காரம்பாளையம்,  கீரணத்தம் ஊராட்சிகளில் தலா 2 இடங்கள், காடம்பாடி, கஞ்சம்பட்டி, பொகலூர்,  எஸ்.அய்யம்பாளையம், சோமையம்பாளையம் ஊராட்சிகளில் தலா ஒரு இடம் என மாவட்டம்  முழுவதும் 42 இடங்களில் ஆய்வு செய்யப்படுவதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் 42 இடங்களில் கடந்த நேற்று முன்தினம் முதல் துவங்கிய ரத்த மாதிரிகள் சேகரிப்பு 14 நாள்கள் வரை மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு பகுதியிலும் 30 நபர்களிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, மாவட்டம் முழுவதும் 1,260 நபர்களிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்படும்.
பொது மக்களிடம் சேகரிக்கப்படும் ரத்த மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை அளிக்கப்படும். இதன் அடிப்படையில், கொரோனா நோய் தொற்று பரவல் கோவையில் எந்தளவில் உள்ளது என்பது தெரியவரும்.  இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Coimbatore district ,
× RELATED பறக்கும் படையால் வியாபாரம் பாதிப்பு