×

விருதுநகர் மாவட்டத்தில் தேவைக்கு ஏற்ப வரத்து இல்லாததால் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏப்.11 முதல் 14 வரை தடுப்பூசி திருவிழாவை அனுசரிப்பது எப்படி?

விருதுநகர், ஏப். 10: விருதுநகர் மாவட்டத்தில் தேவைக்கு ஏற்ப வரத்து இல்லாததால், கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏறப்ட்டுள்ளது. இதனால், ஏப்.11 முதல் 14ம் தேதி வரை தடுப்பூசி திருவிழாவை அனுசரிப்பது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 20 லட்சம் மக்கள் தொகை உள்ளனர். இவர்களில், இதுவரை 17,050 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, 232 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கொரோனா 2வது அலைப்பரவல் வேகம் எடுத்துள்ளது. விருதுநகர் மற்றும் சுற்றுப்பகுதியில் கொரோனா உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. விருதுநகர் அய்யனார் நகரில் கொரியர் நிறுவனத்தில் வேலை செய்த 37 வயது நபர் உயிரிழந்த சம்பவம், விருதுநகர் பங்குனி பொங்கல் பண்டிகையின்போது ஆயிரக்கணக்கான மக்கள் கூடிய நிகழ்வு, தேர்தல் வாக்குப்பதிவு பிரசார கூட்டம் ஆகிய நிகழ்வுகளால், வரும் நாட்களில் தொற்றின் வேகம் அதிகரிக்குமோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதனால், கொரோனா தடுப்பூசி மையங்களில் மக்கள் கூட்டம், கூட்டமாக தடுப்பூசி போட படையெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், விருதுநகர் சுகாதார மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 26 மையங்களிலும், 5 தனியார் மருத்துவமனைகள், சிவகாசி சுகாதார மாவட்டத்தில் 41 அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், 19 தனியார் மருத்துவமனைகள் என 91 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.
தடுப்பூசி போட துவங்கியபோது தேவைக்கு போதுமான அளவில் கோவிசீல்டு தடுப்பூசிகள் வந்தன. துவக்கம் முதல் கோவாக்சின் தடுப்பூசி வரத்து இல்லை. தற்போது கோவிசீல்டு உற்பத்தி மையமான சீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்திற்கு பிறகு கோவிசீல்டு தடுப்பூசி மாவட்டத்திற்கு வாரம் 15 ஆயிரத்திற்கும் குறைவாக வருகிறது.
கோவாக்சின் வாரத்திற்கு ஆயிரத்திற்கும் குறைவாகவே வருகிறது. 20 லட்சம் பேரில் ஒரு லட்சத்து 22 ஆயிரம் பேருக்கு, அதாவது 6 சதவீதம் பேருக்கு மட்டும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
 இதில், ஒரு முறை போட்டோர் எண்ணிக்கை 75 ஆயிரத்திற்கும் அதிகம் இருக்கும். தற்போது தடுப்பூசி போட மக்கள் கூட்டம், கூட்டமாக வரும் நிலையில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி ஏப்.11 முதல் 14 வரை தடுப்பூசி திருவிழாவாக அனுசரிக்க உத்தரவிட்டுள்ள நிலையில், தடுப்பூசி வரத்து இல்லாமல் எப்படி திருவிழாவாக அனுசரிப்பது என்ற கேள்வி மருத்துவத்துறையினர் மத்தியில் எழுந்துள்ளது.

Tags : Virudhunagar district ,
× RELATED முன்னாள் படைவீரர்கள் தேர்தல் பாதுகாப்பு பணியில் சேரலாம்