×

கொரோனா கட்டுப்பாடுகளால் வீரபாண்டி கோயில் திருவிழா நடத்துவதில் மீண்டும் சிக்கல்

தேனி, ஏப். 10: கொரோனா தொற்று அதிகரித்து வருவதையடுத்து, அரசு மீண்டும் கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில் தேனி அருகே வீரபாண்டி கோயில் சித்திரை திருவிழா நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது.
தேனி அருகே வீரபாண்டியில் பிரசித்தி பெற்ற வீரபாண்டி கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாதம் எட்டு நாட்கள் இரவு, பகல் என 24 மணிநேர திருவிழா நடப்பது வழக்கம். இத்திருவிழாவைக் காண தேனி மட்டுமல்லாமல் திண்டுக்கல், மதுரை, திருப்பூர், கோவை, ஈரோடு, சென்னை உள்ளிட்ட பல்வேறுமாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து செல்வர்.
கோயில் திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் உற்சாகமடையும் வகையில் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் இந்து அறநிலைய துறை சார்பில் தனியார் மூலம் பொழுதுபோக்கு அம்சங்களான ராட்டினங்கள், மாயாஜால நிகழ்ச்சிகள், உணவுக் கூடங்கள் அமைக்கப்படும். திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் மற்றும் பக்தர்களின் குழந்தைகள் விளையாடி மகிழ்வது வழக்கம்.  
இத்தகைய சிறப்பு வாய்ந்த வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா  மே 11ம் தேதி தொடங்கி எட்டுநாட்கள் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கான கம்பம் நடுதல் விழா வருகிற ஏப்.20ம் தேதி நடப்பதாக இருந்தது. கடந்த ஆண்டு கொரோனா தொற்று தீவிரமடைந்திருந்ததால் திருவிழா நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. கடந்த நவம்பர் மாதம் முதல் கொரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது.
தேனி மாவட்டத்தில் தற்போது நாளொன்றுக்கு 30 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருவதால் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 130ஐ  தாண்டியுள்ளது. இதனால் பழையபடி, சிறப்பு முகாம்கள் அமைக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் தமிழக அரசு கொரோனா தடுப்பு குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி, 8மணிக்கு மேல் மதவழிபாட்டுத் தலங்களை திறக்கக்கூடாது. மதத் திருவிழாக்கள் நடத்த தடை, திருமண விழாக்களில் 100 பேருக்குள்ளும், இறப்பு நிகழ்ச்சிகளில் 50 பேருக்குள்ளும் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இன்று (ஏப்.10) முதல் தமிழக அரசு கட்டுப்பாடுகளை அமல்படுத்த உள்ளது.
தமிழக அரசின் கொரோனா காலக்கட்டுப்பாடுகள் காரணமாக, தேனி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற முக்கிய திருவிழாவான வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது.
இதுகுறித்து கோயில் நிர்வாக அலுவலர் சுரேஷீடம் கேட்டபோது, கொரோனா கால கட்டுப்பாடுகள் குறித்து அரசு அறிவித்துள்ளது. ஆனால், இதுகுறித்து இதுவரை இந்து சமய அறநிலையத் துறையில் இருந்து தகவல்  வரவில்லை என்றார்.

Tags : Veerapandi temple festival ,
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு