×

கோடை வெயிலால் சரியும் வைகை அணை நீர்மட்டம்

ஆண்டிபட்டி, ஏப்.10: ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் நீர்மட்டம் கோடை வெயில் காரணமாக தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறது.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. இந்த வைகை அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் குடிநீருக்கும், விவசாயத்திற்கும் முக்கிய ஆதாரமாக திகழ்கிறது.  கடந்த ஆண்டு இறுதியில் வைகை அணை முழுக்கொள்ளளவை எட்டியது. இதனால் வைகை அணையை நம்பியுள்ள அனைத்து பகுதிகளுக்கும் தேவையான தண்ணீர் திறக்கப்பட்டது. தேவையான தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் அணையில் உள்ள தண்ணீரை தேக்கி வைத்து தேவைக்கு ஏற்ப பயன்படுத்த பொதுப்பணித்துறையினர் முடிவு செய்தனர்.
அதன் பிறகு அணையில் இருந்து இருப்பில் உள்ள தண்ணீரை குடிநீருக்கும், பாசனத்திற்கும் குறைந்த அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டாலும், இந்த ஆண்டு ஜனவரி மாத இறுதி வரையில் மழை தொடர்ந்தால் அணைக்கு கணிசமான நீர்வரத்து இருந்தது. இதன் காரணமாக வைகை அணை நீர்மட்டம் கடந்த 2 மாதங்களாக 64 அடியாகவே நீடித்து வந்தது.
இந்நிலையில் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாத நிலையிலும், கோடை வெயில் சுட்டெரித்து வருவதாலும் வைகை அணை நீர்வரத்து அடியோடு நின்றுவிட்டது. இதனால் தற்போது வைகை அணைக்கு வினாடிக்கு 5 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அதே சமயம் அணையில் இருந்து மதுரை, சேடப்பட்டி, ஆண்டிபட்டி, தேனி, பெரியகுளம் பகுதியின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 72 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதன்காரணமாக வைகை அணை நீர்மட்டம் படிப்படியாக சரிந்து கொண்டே வருகிறது.
தற்போது வைகை அணை நீர்மட்டம் 63.76 அடியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக நீர்திறப்பதாலும், கோடை வெயிலால் அதிகமான நீர் ஆவியாவதாலும் வைகை அணை நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது.

Tags : Vaigai Dam ,
× RELATED அழகருக்காக ஆற்றில் ஏப்.19ல் தண்ணீர் திறப்பு: கரையோரங்களில் ஆய்வு