45 வயதிற்கு மேற்பட்டோர் 2 வாரத்திற்குள் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்

சிவகங்கை, ஏப்.10: சிவகங்கை மாவட்டத்தில் 45 வயதிற்கு மேற்பட்டோர் இரண்டு வாரங்களுக்குள் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிவகங்கை கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் உணவு விடுதிகளில் பணிபுரியும் பணியாளர்கள், அலுவலர்கள் மற்றும் பொதுமக்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படுவதையும், முகக்கவசம் அணிவதையும் சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். இந்த நடைமுறைகளை முறையாக பின்பற்றாத தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் நபர்களை தொடர்ந்து கண்காணிக்க இ பதிவுமுறை தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

வீட்டிலும் பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவியும், சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடித்தும், அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்தும், முழு ஒத்துழைப்பு நல்கினால்தான், இந்த நோய்த் தொற்றுப் பரவலை முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியும்.

காய்ச்சல் முகாம்கள் தொடர்ந்து நடத்தவும், வீட்டிற்கு வீடு சென்று காய்ச்சல், சளி, இருமல் உள்ளவர்களை தினந்தோறும் கண்காணிக்கவும், நோய்த்தொற்று ஏற்பட்டவர்களது தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து பரிசோதனை மேற்கொள்ளவும் சுகாதாரம், உள்ளாட்சி அமைப்புகளின் துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு மருத்துவ நிலையங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி மையங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. கொரோனா பரவலைத் தடுக்க 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இரண்டு வாரத்திற்குள்ளாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். நோய்த்தொற்று அறிகுறி இருந்தால் தாமதமின்றி உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையை அணுக வேண்டும். நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்கு அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories:

>