முதுகுளத்தூர், சாயல்குடியில் எள் அறுவடையில் விவசாயிகள் தீவிரம் அரசு கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

சாயல்குடி, ஏப்.10: முதுகுளத்தூர், சாயல்குடி பகுதியில் எள் அறுவடை செய்து, மாறுகளை உலர வைத்து எள்ளை பிரித்தெடுக்கும் பணியில் விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்

முதுகுளத்தூர், சாயல்குடி பகுதியில் நெல்லிற்கு அடுத்தபடியாக சிறுதானிய வகை பயிர்கள், மிளகாய், மல்லி, பருத்தி அதிகமாக பயிரிடுவது வழக்கம். இந்நிலையில் கடந்த 2 வருடங்களாக நல்ல மழை பெய்ததால் எள் விவசாயத்தில் ஒரு சில விவசாயிகள் ஆர்வம் காட்டினர்.

முதுகுளத்தூர் அருகே செல்லூர், திருவரங்கம், கடம்போடை, நெடியமாணிக்கம், தேரிருவேலி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் சுமார் 20 ஏக்கருக்கு மேலும், கடலாடி அருகே மலட்டாறு, டி.எம்.கோட்டை, கடுகுசந்தை உச்சிநத்தம், கொண்டுநல்லான்பட்டி, கொக்கரசன்கோட்டை, செவல்பட்டி, எஸ்.தரைக்குடி, சேதுராஜபுரம், ஆப்பனூர், கிடாத்திருக்கை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் சுமார் 20 ஏக்கரில் எள் விவசாயம் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது நன்றாக வளர்ந்து காய் காய்த்து மகசூல் நிலையை எட்டியது.

தற்போது நல்ல மகசூல் கிடைத்ததால் விவசாயிகள் ஆர்வத்துடன் அறுவடை செய்து, எள் மாறுகளை காயவைத்து பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து விவசாயிகள் கூறும்போது, இந்தாண்டு தொடர்மழை காரணமாக சில இடங்களில் தோட்டப்பயிர்களான மிளகாய், மல்லி, சின்ன வெங்காயம் விவசாயம் பாதிக்கப்பட்டது. இதனால் சுமார் 3 மாத குறுகிய காலத்தில், குறைந்தளவு தண்ணீரில் வளரக்கூடிய எள் பயிர்களை பயிரிட்டோம், எதிர்பார்த்தப்படி நன்றாக வளர்ந்து மகசூல் நிலையை எட்டியதால் அறுவடை செய்து, அந்த மாறுகளை கட்டுகளாக கட்டி வெயிலில் உலர வைத்து, பிரித்தெடுத்து வருகிறோம்.

வெளிமார்க்கெட்டில் எள் கிலோ ஒன்றிற்கு ரூ.80 முதல் ரூ.100 வரை வாங்குகின்றனர். இது கட்டுபடியாகும் விலையாக இல்லை. எனவே அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் எள்ளிற்கு விலை நிர்ணயம் செய்து கூடுதல் விலைக்கு வாங்க வேண்டும், வரும் காலங்களில் எள் பயிரிட தேவையான உதவிகளை வேளாண்துறை வழங்க வேண்டும் என்றனர்.

Related Stories:

>