×

வில்லூர் பராசக்தி காளியம்மன் கோயில் திருவிழாவில் பால்க்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

திருமங்கலம், ஏப். 10:  வில்லூர் புகழ்பெற்ற பராசக்தி காளியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் பால்க்குடம் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கள்ளிக்குடி அருகே வில்லூர் கிராமத்தில் பிரசித்திபெற்ற சங்கிலி கருப்பசாமி, பராசக்தி காளியம்மன் கோயில்கள் உள்ளன. இக்கோயில்களில் கடந்த மூன்று தினங்களாக பங்குனி பொங்கல் திருவிழா நடந்து வந்தது.  திருவிழாவின் முக்கிய நாளான நேற்று பராசக்தி காளியம்மனுக்கு, அழகாத்தி ஊரணி விநாயகர் கோயிலில் இருந்து பக்தர்கள் பால்க்குடம், சந்தனக்குடம் எடுத்தும், வேல்குத்தியும், ரதம் இழுத்தும் நேர்த்திகடன் செலுத்தினர். இதனை ஒட்டி வில்லூர், கள்ளிக்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வாயில் வேல்குத்தி வேல் காவடிஎடுத்தும், பறவை காவடி, மச்சக்காவடி எடுத்தும் கிராமத்தில் ஊர்வலமாக வந்தனர். கிராம பெண்கள் பால்க்குடம் எடுத்து வந்தனர். காவடிகள் மற்றும் பால்குடம் பராசக்தி காளியம்மன் கோயிலை அடைந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதாம் வழங்கப்பட்டது. நேற்று மாலையில் பெண்கள் அக்கினிச்சட்டி எடுத்து, ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடனை செலுத்தினர். இரவில் கிராமமக்கள் தங்கள் வீடுகளில் மஞ்சள் நீர் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.  திருவிழாவில் இன்று வெளியூரிலிருந்து வரும் பக்தர்களுக்கு அசைவ அன்னதானம் வழங்கப்படுகிறது. வில்லூரில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் நடைபெறும் இந்த திருவிழா வழக்கமான உற்சாகத்துடன் நேற்று கொண்டாடப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Tags : Parasakthi Kaliamman Temple Festival ,Villupuram ,
× RELATED கோடை காலம் துவங்கிய நிலையில்...