×

ஒரே நாளில் 19 பேருக்கு பழநியில் கொரோனா வேகமாக பரவுவதால் பொதுமக்கள் பீதி

பழநி, ஏப்.10: பழநியில் ஒரே நாளில் 19 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனா 2வது அலை வீசி வருகிறது. நாளொன்றிற்கு சராசரியாக 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பழநியில் கடந்த சில தினங்களாக 15க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருந்தனர். ஓய்வு பெற்ற பேராசிரியர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு பலியாகி இருந்தார். இந்நிலையில் நேற்று ஒரே நாளில் பழநி மற்றும் தொப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் பெரும்பாலானோர் கிராமப்புற பகுதியைச் சேர்ந்தவர்கள். ஒரே நாளில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருப்பது பெரும் கவலையை உண்டாக்கி உள்ளது. ஒரே பகுதியில் 3 பேர் பாதிக்கப்பட்டிருந்தால் அந்த பகுதியை சீல் வைக்கும் நடவடிக்கை தற்போது மீண்டும் துவங்கி உள்ளது. பழநி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டு உருவாக்கப்பட்டுள்ள நிலையில், விரிவாக்கம் செய்யவும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எனினும், பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாத சூழலே நிலவுகிறது. பஸ் பயணம் மற்றும் மார்க்கெட் பகுதிகளில் தற்போதுவரை பொதுமக்களில் பெரும்பாலானோர் முகக்கவசம் அணிவதே இல்லை. சமூக இடைவெளிகளை பின்பற்றுவதும் இல்லை. எனவே, சுகாதாரத்துறையினர் துரித நடவடிக்கை எடுத்து முகக்கவசம் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Palani ,
× RELATED கோடை காலத்தை சமாளிக்க பண்ணைக்குட்டைகள் அமைக்க விவசாயிகள் ஆர்வம்