ஒரே அறையில் 40 மாணவர்கள் டியூசன் சென்டர்களால் கொரோனா பரவும் அபாயம்

சின்னாளபட்டி, ஏப். 10: சின்னாளபட்டியில் கொரோனா பரவும் இடமாக மாறிவரும் தனியார் பள்ளி ஆசிரியர்களின் டியூசன் வகுப்புகளால்  மாணவர்களுக்கு கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சின்னாளபட்டியில் உள்ள தனியார் மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் தங்கள் வருவாயை பெருக்கும் விதமாக, வீட்டின் அறைகளை டியூசன் சென்டராக மாற்றி வருகின்றனர். சின்னாளபட்டியில் மேட்டுப்பட்டி காமாட்சி காலனி, காமராசர் சாலை, கலைஞர் கருணாநிதி காலனி, காமாட்சி நகர், ஜனதா காலனி, ஒன்னிசெட்டியார் தெரு, திரு.வி.க.நகர், கலைமகள் காலனி பகுதியில் உள்ள ஆசிரியர்கள் ஒருசிலர் தங்கள் வீட்டின் அறைகளை டியூசன் எடுக்கும் அறைகளாக மாற்றியுள்ளனர்.

 காலை மற்றும் மாலை நேரங்களில் சிறிய அறைகளில் 30 முதல் 40 மாணவர்கள் வரை அமர்ந்து படிக்கும்போது தனிநபர் இடைவெளியை கடைபிடிக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு மாணவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் 40 மாணவர்களுக்கும் உடனடியாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பேரூராட்சி நிர்வாகம் மற்றும் வட்டார சுகாதாரத்துறை அதிகாரிகள், ஆய்வாளர்கள் ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளின் வீடுகளில் நடைபெறும் டியூசன் வகுப்புகளுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதுதவிர டியூசன் வகுப்புகளை மருத்துவத்துறை மற்றும் சுகாதாரத்துறை பணியாளர்கள் கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. பள்ளி மாணவ, மாணவியருக்கு கொரோனா தொற்று பரவும் முன் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>