ஊரடங்கு காலத்தில் கலைநிகழ்ச்சிகள் நடத்திட அனுமதி வழங்க வேண்டும் கலெக்டரிடம் நாட்டுப்புற கலைஞர்கள் மனு

திண்டுக்கல், ஏப். 10: தமிழ்நாடு நாடகம் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள் மாநில நலச்சங்க மாநில துணைப் பொதுச்செயலாளர் சந்தோஷ் தலைமையில் திண்டுக்கல் மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்க வந்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 2ம் கட்ட கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது. இதனையடுத்து தமிழக அரசு இன்று முதல் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடு அறிவித்துள்ளது.  இந்த ஊரடங்கு கட்டுப்பாட்டினால் நாடகம் மட்டும் நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல்  மாவட்டத்தில் மட்டும் தப்பாட்டம், தெருக்கூத்து, கரகம், காவடி, நாடக கலைஞர்கள் உள்ளிட்ட என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர்.

எனவே, திரையரங்குகளுக்கு 50% இருக்கைகளுடன்  இயக்க அனுமதி கொடுத்தது போல் திருவிழா மற்றும் மேடைக்கச்சேரிக்கும் கட்டுப்பாடுடன் கூடிய தளர்வுகள் அறிவிக்க வேண்டும். அப்படி அறிவித்தால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படாது. கட்டுப்பாடுகள் தளர்வு அறிவிக்காத நிலையில் கொரோனா நிவாரணமாக கலைஞர்கள் அனைவருக்கும் மாதம் 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். மேலும் கடந்த ஊரடங்கு காலத்தில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. அதில் 50 சதவிகிதம் பேருக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. இதனால் நாடகம் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள் அதிக அளவில் பாதிப்பு அடைந்தனர்.  இந்த முறையாவது அனைவரும் பயன்படும் வகையில் உதவித்தொகை வழங்க வேண்டும்  என மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமியிடம் கோரிக்கை மனுவை வழங்கினர்.

Related Stories:

>