×

வீடு, வீடாக காய்ச்சல், சளி பரிசோதனை தொடக்கம் குமரி பள்ளி, கல்லூரிகளில் மீண்டும் கொரோனா கவனிப்பு மையம் பாதிப்பு எண்ணிக்கை 4ஐ தாண்டினால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு

நாகர்கோவில், ஏப்.10: குமரியில் கொரோனாவை கட்டுப்படுத்த வீடு, வீடாக சளி மற்றும் காய்ச்சல் பரிசோதனை தொடங்கி உள்ளது. பள்ளி, கல்லூரிகளில் மீண்டும் கொரோனா கேர் சென்டர்கள் அமைக்கப்பட உள்ளன. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், இன்று (10ம்தேதி) முதல் தமிழ்நாடு அரசு மீண்டும் விதித்துள்ள பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன. இந்த கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் நேற்று அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் கலெக்டர் அரவிந்த் பேசியதாவது :நோய் தொற்றை கட்டுப்படுத்த ஒரு சில செயல்பாடுகளுக்கு முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது.  கட்டுப்படுத்ததப்பட்ட பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி எந்தவித தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.  நோய் பரவலை கருத்தில் கொண்டு திருவிழா, மத கூட்டங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. . குமரி மாவட்டத்தில் மொத்த வியாபார காய், கனி வளாகங்களில் சில்லரை விற்பனை கடைகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.  தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் உணவு விடுதிகளில் பொதுமக்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட வேண்டும்.  ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டி நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி தொழிற்சாலைகள் இயங்க வேண்டும்.

குமரி மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த அனைத்து துறை அதிகாரிகளும் தீவிரமாக பணியாற்ற வேண்டும். முதற்கட்ட கொரோனா பாதிப்பின் போது மேற்கொள்ளப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் தற்பொழுது மேற்கொள்ள வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி, கோட்டார் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கல்வி நிறுவனங்களில் கொரோனா கவனிப்பு மையம் திறக்க தேவையான முன்னேற்பாடு பணிகளை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். காவல்கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, கலெக்டர் மெர்சி ரம்யா, மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், பத்மநாபபுரம் சப் - கலெக்டர் சிவகுருநாதன், நாகர்கோவில் ஆர்.டி.ஓ.மயில்,  சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் கிருஷ்ணலீலா, மாநகராட்சி நகர்நல அதிகாரி டாக்டர் கிங்சால், பொறியாளர் பாலசுப்பிரமணியன், மருத்துவக் கல்லூரி முதல்வர் சுகந்தி ராஜகுமாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 குமரி மாவட்டத்தில் மாநகர மற்றும் பேரூராட்சி, ஊராட்சிகளில் பகுதிகளில் மீண்டும் காய்ச்சல் கணக்கெடுப்பு நடக்கிறது. கொரோனா பாதித்தவர்கள் பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு சளி பரிசோதனையும்  நடத்தப்பட்டு வருகிறது. நாகர்கோவில் மாநகர பகுதியில் ஆணையர் ஆஷா அஜித் உத்தரவின் பேரில் நகர் நல அலுவலர் டாக்டர் கிங்சால் மேற்பார்வையில் கொரோனா பாதித்தவர்கள் உள்ள பகுதிகளில் உள்ளவர்களுக்கு வீடு, வீடாக சளி மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. முககவசம் அணியாமல் சென்றவர்களுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. காவல்துறையினரும் அபராதம் விதிப்பில் இறங்கி உள்ளனர். இன்று முதல் இந்த நடவடிக்கை கடுமையாக்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறினர். இதற்கிடையே கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4 ஐ தாண்டினால், அந்த பகுதியை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதிகளவில் இனி அபராதம், சீல் வைப்பு
கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய கலெக்டர் அரவிந்த், முக கவசம் அணியாமல்  வருபவர்களுக்கு ₹200 அபராதம் விதிக்க வேண்டும். அதிகம் பேருக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும். சமூக இடைவெளி கடைபிடிக்காத நிறுவனங்கள், ஓட்டல்கள், கடைகள், அலுவலகங்களுக்கு முதல்கட்டமாக ₹5000 அபராதமும், 2 வது கட்டமாக ₹10 ஆயிரமும் அபராதம் விதியுங்கள். தொடர்ந்து அலட்சியமாக இருந்தால், அந்த நிறுவனத்தை சீல் வைக்க வேண்டும் என கூறினார்.




Tags : Home ,Fever ,Cold Testing Start Kumari School ,Colleges ,Corona Care Center ,
× RELATED ருமெட்டிக் காய்ச்சல் அறிவோம்!