×

குமரியில் வாக்குசாவடியில் பணியில் இருந்த சப்- இன்ஸ்பெக்டருக்கு கொரோனா

நாகர்கோவில், ஏப்.10 : குமரி மாவட்டத்தில் தற்போது கொரோனா பாதிப்பு  அதிகரித்துள்ளது. தற்போது 17 ஆயிரத்து 360 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 152 பேர் சிகிச்சையில் உள்ளனர். 334  பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் வில்லுக்குறி அருகே வாக்குசாவடியில் பணியில் இருந்த எஸ்.ஐ.க்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கடந்த 6ம் தேதி வாக்குசாவடி பணி முடிந்த அவர், 7ம் தேதி அதிகாலையில் வாக்கு பெட்டிகளை கோணம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் வந்து ஒப்படைத்தார். அன்று மதியத்தில் இருந்து உடல் வலி, காய்ச்சல் இருந்ததால், கொரோனா பரிசோதனை செய்தார். இதில் அவருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே பிரதமர் பாதுபாப்பு பணிக்கு வந்த ஏடிஎஸ்பி ஒருவர் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார். காவல்துறையினர் மத்தியிலும் கொரோனா பரவல் தொடங்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  தற்போது இந்த வாக்குசாவடியில் பணியில் இருந்த மற்ற அலுவலர்கள், காவல்துறையினருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது. இந்த வாக்குசாவடியில் பணியில் இருந்தவர்கள் கொரோனா  முதற்கட்ட தடுப்பூசி போட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags : Corona ,Kumari ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...