×

சாமிதோப்பு தலைமைப்பதியில் இருந்து முட்டப்பதிக்கு முத்துக்குடை ஊர்வலம்

தென்தாமரைகுளம், ஏப்.10: சாமிதோப்பு  அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் இருந்து முட்டப்பதிக்கு முத்துக்குடை  ஊர்வலம் நேற்று காலை நடந்தது. இதில் அய்யாவழி பக்தர்கள் திரளாக  கலந்து கொண்டனர்.
அய்யா வைகுண்டசாமி சாமிதோப்பு தலைமைபதியின் வடக்கு  வாசலில் 6 ஆண்டுகள் தவம் இருந்தார். தவம் நிறைவடையாத நிலையில்  திருவனந்தபுரம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் மன்னர் அய்யா வைகுண்டசுவாமியை  சிறை பிடித்து வர ஆள் அனுப்புகிறார். இதனால் அய்யா வைகுண்டசாமி தன்னுடைய  சீடர்கள், பக்தர்களுடன் முட்டப்பதி கடலுக்குள் சென்று 2வது முறையாக விஞ்சை  பெற்று அன்று மாலையே சாமிதோப்புக்கு திரும்பி வந்ததாக அகிலத்திரட்டு  கூறுகிறது. அந்த நாளை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு வருடமும்  பங்குனி மாதம் 4வது வெள்ளிக்கிழமை சாமிதோப்பில் இருந்து முட்டப்பதிக்கு  முத்துக்குடை ஊர்வலம் செல்வது வழக்கம். அதன்படி இந்த வருடத்துக்கான  முத்துக்குடை ஊர்வலம் நேற்று காலை நடந்தது. அதையொட்டி தலைமைப்பதியில் அதிகாலை 5 மணிக்கு அய்யாவுக்கு சிறப்பு பணிவிடை  நடந்தது.

தொடர்ந்து முத்துக் குடை ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலத்தை பால பிரஜாபதி அடிகளார் தொடங்கி வைத்தார்.  பையன் நேம்ரிஷ் தலைமை வகித்தார். பையன்கள் கிருஷ்ணராஜ், கிருஷ்ணநாமமணி,  செல்லவடிவு  ஆகியோர் முன்னிலை வகித்தனர். பையன் நேம்ரிஷ் தலைமையில்  முத்துக்குடை ஊர்வலம் புறப்பட்டது. மேளதாளங்கள் முன்செல்ல தொடர்ந்து  முத்துக்குடையும், பக்தர்களும் சென்றனர். தலைமைப்பதியை சுற்றிவந்த  ஊர்வலம் பெரிய ரத வீதியையும் சுற்றி வந்தது. பின்னர் ஊர்வலம்  கரூம்பாட்டூர், விஜயநகரி, வெள்ளையந்தோப்பு, ஈச்சன்விளை, அகஸ்தீஸ்வரம்,  விவேகானந்தபுரம் வழியாக பகல் 12 மணிக்கு முட்டப்பதியை சென்றடைந்தது. அங்கு  பக்தர்கள் கடலில் புனித நீராடினர். தொடர்ந்து முட்டப்பதியில் பணிவிடையும்,    உச்சிப்படிப்பும் நடந்தது.அதன் பிறகு நண்பகல் 1  மணிக்கு  அன்னதானம் நடந்தது. மாலை 3 மணிக்கு முட்டப்பதியில் இருந்து ஊர்வலம்  சாமிதோப்புக்கு புறப்பட்டது. தொடர்ந்து கொட்டாரம், பொத்தையடி, அரசம்பதி  வழியாக ஊர்வலம் இரவு 7 மணிக்கு சாமிதோப்பு தலைமைப்பதியை வந்தடைந்தது.  பின்னர் அய்யா வைகுண்டசாமிக்கு பணிவிடை நடந்தது. ஊர்வலத்தில் திரளான  அய்யாவழி பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Samithoppu ,Muttappathi ,
× RELATED மாவட்ட நிர்வாகம் சார்பில் ‘100 சதவீதம்...