×

ரயில்கள் வழக்கம்போல் இயக்கம் மதுரை கோட்ட மேலாளர் தகவல்

தூத்துக்குடி, ஏப். 10: ரயில்கள் வழக்கம்போல  இயக்கப்படுகின்றன. சூழ்நிலைக்கேற்ப ரயில் சேவைகள் கூடுதலாக்கப்படும் என்று மதுரை கோட்ட மேலாளர் லெனின் கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. நெல்லையிலும் தொற்று பாதிப்பு, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா முதல் அலையின் போது பஸ், ரயில் ஆகிய பொது போக்குவரத்து நடைபெறவில்லை. தற்போது பொது போக்குவரத்து இயக்கப்பட்டு வரும் நிலையில், வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக ரயில் நிலையங்களில் அதிகம் கூட்டம் கூடுவதை தவிர்க்க நெல்லை, மதுரை, திண்டுக்கல் ஆகிய ரயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம் ரூ.50 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் லெனின் கூறியிருப்பதாவது:

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கோவில்பட்டி, செங்கோட்டை ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு வெப்பநிலையை தானாக பதிவு செய்யும் காமிராக்கள் மற்றும் பயணச்சீட்டுகளை தொடாமல் ஸ்கேன் செய்து சோதிக்கும் முறையும் பயன்பாட்டில் உள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான அடிக்கொரு முறை கை கழுவுதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், முகக்கவசம் அணிதல் போன்றவை குறித்து சுவரொட்டி  மற்றும் மின்னணு விளம்பர பலகைகள் மூலமாக ரயில் நிலையங்களில் விளம்பரப்படுத்தப்படுகிறது. ரயில் நிலையங்களில் பயணச்சீட்டு பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. ரயில் போக்குவரத்து  நிறுத்தப்படும், அதிக அளவில் புலம்பெயர் தொழிலாளர்கள் ரயில் நிலையங்களில்  கூடுகிறார்கள் போன்ற வதந்திகள் பழைய வீடியோக்களை பயன்படுத்தி  சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது. அது தவறான தகவல். ரயில்கள் வழக்கம்போல  இயக்கப்படுகின்றன. சூழ்நிலைக்கேற்ப ரயில் சேவைகள் கூடுதலாக்கப்படும்.  புலம்பெயர் தொழிலாளர்கள் அதிக அளவில் ரயில் நிலையங்களில் கூடவில்லை. இவ்வாறு கூறியுள்ளார்.

Tags : Madurai Divisional ,
× RELATED ரயிலின் வேகம் அதிகரிப்பால் 3 மில்லியன்...