தூத்துக்குடி மார்க்கெட்டில் ஸ்மார்ட் சிட்டி பணியை எதிர்த்து வழக்கு மாற்று ஏற்பாடு செய்யவும், கடைகளை காலி செய்யவும் உத்தரவு

மதுரை, ஏப். 10:  தூத்துக்குடி மார்க்கெட்டில் ஸ்மார்ட் சிட்டி பணிக்கு எதிரான வழக்கில் மாற்று ஏற்பாடு செய்து தரவும், மே 7க்குள் கடைகளை காலி செய்ய வேண்டுமெனவும் ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.  தூத்துக்குடியைச் சேர்ந்த வேலுசாமி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தூத்துக்குடியில் உள்ள  வஉசி காய்கறி மார்க்கெட் மிகவும் பழமையானது. கடந்த 1972 முதல் இயங்கி வருகிறது. சுமார் 62 கடைகள் உள்ளன. சுமார் 6 ஆயிரம் பேரின் வாழ்வாதாரமாக இந்த மார்க்கெட் உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இந்த மார்க்கெட்டில் புதிதாக கட்டிட பணி நடந்து வருகிறது. புதிய கடைகள் கட்டுவதற்காக ஏற்கனவே உள்ள நிரந்தர கடைகளை அகற்ற முடிவு செய்துள்ளனர். இதற்காக எந்தவித முன்னேற்பாடும் செய்யவில்லை. கடலோர பாதுகாப்பு மண்டலப் பகுதியில் வருவதால் இதற்கென உரிய அனுமதி பெற்றுத்தான் பணிகள் மேற்கொள்ள முடியும். எனவே, விதிகளை பின்பற்றாமலும், மாற்று ஏற்பாடு இன்றியும் மார்க்கெட்டில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் மேற்கொள்ளத் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோர், மார்க்கெட் கழிவுகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும். பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் நலன் கருதி மே 7க்குள் கடைகளை காலி செய்ய வேண்டும். மாநகராட்சி தரப்பில் மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டுமென கூறி, மனுவை முடித்து வைத்தனர்.

Related Stories:

>