×

இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல் கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலில் பங்குனி தேரோட்டம் நடக்குமா?

கோவில்பட்டி, ஏப்.10: கொரோனா பரவலையொட்டி இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருவதால் கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலில் பங்குனி பெருந்திருவிழா தேரோட்டம் நடைபெறுமா? என்ற எதிர்பார்ப்பு பக்தர்களிடையே எழுந்துள்ளது.கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா கடந்த 5ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 15ம் தேதி வரை 11 நாட்கள் திருவிழா நடக்கிறது. இதையொட்டி தினமும் சுவாமி, அம்பாள் காலை மற்றும் மாலையில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 7-ம் திருநாளான நாளை (11ம் தேதி) முதல் காலம் இரவு 7 மணிக்கு நடராஜர் சிவப்பு சாத்தி சப்பரத்தில் எழுந்தருளல், 2-ம் காலம், இரவு 11 மணிக்கு வெள்ளை சாத்தி எழுந்தருளல், 3-ம் காலம் 12-ம் தேதி அதிகாலை பச்சை சாத்தி எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. 8-ம் நாளான 12-ம் தேதி மாலை 4 மணிக்கு பிச்சாடநாதர் சப்பரத்தில் வீதி உலாவும், சந்திரசேகரர் பரிவேட்டைக்கு குதிரை வாகனத்தில் புறப்படுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ம் நாளான 13-ம் தேதி நடக்கிறது. சுவாமி, அம்பாள் எழுந்தருளியதும், காலை 8 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. 10-ம் நாளான 14-ம்தேதி தீர்த்தவாரியும், 11-ம் நாளான 15-ம் தேதி தெப்பத் திருவிழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கொரோனா தொற்றின் 2வது அலை வேகமாக பரவி வருவதால் தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையொட்டி தமிழகத்தில் இன்று (10ம்தேதி) முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது. அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாடு இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படும். இருப்பினும் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலில் வரும் 13ம் தேதி பங்குனி திருவிழா தேரோட்டம் நடைபெறுமா? என பக்தர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.பொருட்காட்சி செயல்படுமா?கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இதையொட்டி கோயில் வளாகத்தில் ராட்டினம், பொருட்காட்சி ஸ்டால்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெறும். இந்தாண்டு தேரோட்டத்தையொட்டி கோயில் வளாகத்தில் ராட்டினம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வருவதால் ராட்டினம் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் செயல்படுமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

Tags : Amal Kovilpatti ,Shenbagavalliyamman Temple Panguni election ,
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...