×

விதி மீறி தண்ணீர் குழாய் பதிப்பு அதிகாரிகளை கண்டித்து கிராம மக்கள் தர்ணா

இடைப்பாடி, ஏப்.10: இடைப்பாடி அருகே விதி மீறி தண்ணீர் குழாய் பதித்து வருவோர் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே புல்லா கவுண்டம்பட்டி ஊராட்சி சீரங்க கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சிலர், அப்பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதற்காக விதி மீறி குழாய் பதிக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பொதுமக்கள் அன்றாடம் காவிரி ஆற்றுக்குச் செல்லும் வழித்தடத்திலும் பள்ளம் தோண்டி சேதப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், மின்வாரிய நிலத்தையும் ஆக்கிரமித்து குழாய் பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் நேற்று போராட்டத்தில் குதித்தனர். குழாய் அமைக்கும் பணிக்காக சென்ற டிராக்டரை வழிமறித்து சிறைபிடித்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவலின்பேரில், மின்வாரிய அதிகாரிகள் மற்றும் தேவூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தாமரை ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது, ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதன்பேரில், அனைவரும் கலைந்து சென்றனர்.

அப்போது, அவர்கள் கூறுகையில், குழாய் பதிக்கும் பணிக்காக பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பாதை மற்றும் ஊராட்சி சாலையை சேதப்படுத்தியது குறித்து சம்பந்தப்பட்ட அதகாரிகளிடம் முறையிட்டும் இதுவரையிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், ஆளும் கட்சி பிரமுகர்களின் ஆதரவுடன் தற்போது மின்வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் பள்ளம் தோண்டி குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

Tags : Dharna ,
× RELATED வாக்காளர்களுக்கு பாஜ பணம் பட்டுவாடா...