சம்பளம் குறைப்பை கண்டித்து மேட்டூர் அனல் மின் நிலைய ஊழியர்கள் திடீர் போராட்டம்

மேட்டூர், ஏப்.10: மேட்டூர் அனல் மின் நிலையத்தில் சம்பள குறைப்பை கண்டித்து தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேட்டூர் அனல்மின் நிலையத்தில் 2 பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட நான்கு அலகுகள் செயல்பட்டு வருகின்றன. 2வது பிரிவில் 600 மெகாவாட் திறன் கொண்ட ஒரு அலகு செயல்பட்டு வருகிறது. இவற்றின் மூலம் 1440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். 2வது பிரிவில் உற்பத்தி பணிகளை தனியார் நிறுவனம் ஒப்பந்தம் எடுத்து செய்து வந்தது. இந்த தனியார் நிறுவனத்தில் சுமார் 200 பேர் பணிபுரிந்து வந்தனர். ஒப்பந்த காலம் நிறைவடைந்ததால் வேறு டெண்டர் கோரப்பட்டது. இதையடுத்து, வேறொரு நிறுவனம் ஒப்பந்த பணியை எடுத்துள்ளது.

ஆனால், பழைய நிறுவனம் தொழிலாளர்களுக்கு உரிய சம்பளத்தை வழங்க வில்லை. சம்பளத்தை பாதியாக குறைத்து  வழங்கியது. இதனால், பிப்ரவரி மாத சம்பள பணம் ₹6.5லட்சத்தை ஒரு பையில் போட்டு அனல் மின் நிலைய கொடிக்கம்பத்தின் கீழ் வைத்துவிட்டனர். இதனை பாதுகாக்க அனல் மின் நிலைய நிர்வாகம் தரப்பில் பாதுகாவலர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், மார்ச் மாத சம்பளமும் சரிவர வழங்க நிர்வாகம் முன்வராத காரணத்தால் தொழிலாளர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் குதித்தனர். இதனால், மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் அனல் மின் நிலைய தலைமை பொறியாளர் மற்றும் கண்காணிப்பு பொறியாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். முழு சம்பளத்தையும் வழங்கும் வரை போராட்டம் தொடரும் என தொழிலாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், மேட்டூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories:

>