×

திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுகவினர் பணம் பட்டுவாடா

திருப்போரூர்: திருப்போரூர் சட்டமன்ற தொகுதி தேர்தலில் பணப்பட்டு வாடா செய்த அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொகுதி தேர்தல் அலுவலரிடம் திமுகவினர், புகார் மனு அளித்தனர். திருப்போரூர் நகர திமுக செயலாளர் மு.தேவராஜ், தொகுதி வழக்கறிஞர் அணித்தலைவர் வீ.சந்திரன், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர்கள் சந்திரன், அன்பழகன், பரணிதரன், நகர துணை செயலாளர் பரசுராமன், ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர் ரவிக்குமார் ஆகியோர் திருப்போரூர் தொகுதி தேர்தல் அலுவலர் சுப்பிரமணியனை நேற்று காலை சந்தித்தனர். அப்போது அவரிடம், அவர்கள் புகார் மனுவை கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது. கடந்த 6ம் தேதி நடந்த சட்டமன்ற தேர்தலின்போது அதிகாரிகள் துணையுடன் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள், ஏராளமான முறைகேடுகளில் ஈடுபட்டனர். குறிப்பாக திருப்போரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட அதிமுக நிர்வாகிகளில் சிலர், பாமக மற்றும் கூட்டணி கட்சியினருடன் இணைந்து  அனைத்து வார்டுகளிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி கட்சிக் கொடிகளுடன் சென்று வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வாக்கு கேட்டனர்.

மேலும், அரசின் பல்வேறு துறைகளில் பணியில் உள்ளவர்களும் இவ்வாறு ஆளுங்கட்சி சார்பாக கலந்து கொண்டதுடன், அரசு அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு பூத் சிலிப் வழங்குதல், முகவராக செயல்படுதல் போன்றவற்றில் ஈடுபட்டனர்.
மேலும், 5 மற்றும் 9வது வார்டுகளில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்ததற்கான வீடியோ ஆதாரமும் உள்ளது. இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் மற்றும் அரசு ஊழியர் நடத்தை விதிமுறைகள், தேர்தல் நடைமுறை சட்டம் ஆகியவற்றை மீறிய செயலாகும். எனவே, மேற்படி ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள், பாமக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் மீதும், தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Tags : Assembly ,Tiruporur ,
× RELATED கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில்...