×

பரங்கிமலை உள்பட 3 ஒன்றியங்களில் கொரோனா பரவல் அதிகம்

தாம்பரம், ஏப். 10: பரங்கிமலை, காட்டாங்கொளத்தூர், திருப்போரூர் ஆகிய ஒன்றியங்களில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது என கலெக்டர் ஜான்லூயிஸ் கூறினார். செங்கல்பட்டு மாவட்டத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்து விட்டது. தாம்பரம், பல்லாவரம் நகராட்சியில் நாளுக்கு நாள், கொரோனா  பாதிப்பு அதிகரித்து வருகிறது.இந்நிலையில், கொரோனா பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்கு செங்கல்பட்டு கலெக்டா் ஜான்லூயிஸ், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது கிழக்கு தாம்பரம், பூண்டி பஜார் பகுதியில் உள்ள நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்தார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது.பாதுகாப்பு நடைமுறைகள் சரியாக பின்பற்றாததால் கொரோனா வேகமாக பரவுகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் தொற்று உள்ளவர்கள் வீட்டு தனிமையில் 14 நாட்கள் கண்காணிக்கப்படுகிறார்கள். மாவட்டத்தில் முன்பு 70 முகாம்கள் நடந்தது, தற்போது 100 முகாம்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தினமும் சராசரியாக 1000 பேர் வரை பரிசோதனைக்கு தயாராக உள்ளனர்.

தாம்பரம், செங்கல்பட்டு ஆகிய அரசு மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதி உள்ளது. தாகூர், எஸ்ஆர்எம், பாரத் உள்பட 7 தனியார் மருத்துவக் கலூரிகளிலும் கொரோனா மையம் உள்ளது. பரங்கிமலை, காட்டாங்கொளத்தூர், திருப்போரூர் ஆகிய ஒன்றியங்களில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில், மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையம் உள்ளதால் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறார்கள்.
உள்நாட்டு விமான பயணிகளுக்கு கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி மாநில பயணிகளை தவிர மற்ற மாநில பயணிகள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தபடுகிறார்கள். செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் முகக் கவசம் அணியாமல் வெளியில் செல்ல வேண்டாம். பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி, கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

 இதுவரையில், 1.33 லட்சம் பேர் முதல்நிலை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். 10,340 பேர் 2ம் கட்ட தடுப்பூசி போட்டுள்ளனர். கடந்த ஆண்டின்போது தடுப்பூசி இல்லை, தற்போது தடுப்பூசி உள்ளதால் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தாம்பரம் நகராட்சி மார்க்கெட் பகுதியில், கொரோனா பரவலை தடுக்க சில்லறை விற்பனை கடைகள் மூடப்படும். இது தொடர்பாக தாம்பரம் நகராட்சி ஆணையர் சித்ரா நடவடிக்கை எடுப்பார். சந்தைகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் செயல்படலாம் என்றார்.

Tags :
× RELATED ஏரிகளில் நீர் இருப்பு, கடல்நீரை...