×

தர்மபுரி மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் குறைந்துள்ளன

நல்லம்பள்ளி, ஏப்.10: தர்மபுரி மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் குறைந்துள்ளன என்று மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் தெரிவித்தார்.
தமிழக குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் முனைவர் ராமராஜ் நேற்று தர்மபுரி வந்தார். அவர் நேற்று காலை தொப்பூர் சுங்கசாவடி அருகே உள்ள வள்ளலார் குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். ஆய்வின் போது, குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் கழிவறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், தங்கும் வசதி, பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தார். இதை தொடர்ந்து மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலகத்தில் கலந்தாய்வில் பங்கேற்றார்.
பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது: தர்மபுரி மாவட்டத்தில் 24 அங்கீகரிக்கப்பட்ட குழந்தை பாதுகாப்பு இல்லங்கள் உள்ளன. இதில் கொரோனாவிற்கு முன்பு 1,200 குழந்தைகள் இருந்தனர். தற்போது சிறிது குறைவான எண்ணிக்கையில் உள்ளனர். சிறுவர் நீதி சட்டப்படி பதிவு செய்யப்பட்டு செயல்படும் குழந்தை பாதுகாப்பு இல்லங்களில் குழந்தைகளுக்கு உரிய வசதி செய்யப்பட்டுள்ளதா, கழிவறை, குளியலறை, தங்கும் அறை, முதல் உதவி சிகிச்சை பிரிவு ஆகிய உள்கட்டமைப்புகள் உள்ளதா என்றும் நடைமுறைகள் பன்பற்றப்படுகிறதா என்றும், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் இல்லங்களில் ஆய்வு செய்தோம். இங்கு தங்கியுள்ள குழந்தைகளுக்கு உரிய ஆவணம் உள்ளதா, தங்கும் அனுமதி, குறைகள் உள்ளதா என்றும் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டது.  

தர்மபுரி மாவட்டத்தை பொறுத்தவரை குழந்தை நல பாதுகாப்பு மாவட்ட குழுவிற்கு ஒரு தனி கட்டிடம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே அமைய வேண்டும் என கருதுகிறோம். தர்மபுரி மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குழு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சிறுவர் நீதி சட்டப்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு காவல் நிலையம் ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தை பொறுத்தவரை குழந்தை திருமணங்கள் குறைந்துள்ளன. குழந்தை திருமணத்தை தடுக்க பெற்றோர், மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மட்டுமே சரியான தீர்வாக இருக்கும். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிவாரணமாக, போக்சோ சட்டத்தின் கீழ் ₹4 கோடியே 42 லட்சம் நிவாரணம் வழங்க மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு முனைவர் ராமராஜ் கூறினார்.ஆய்வின் போது, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவகாந்தி, டிஎஸ்பி ரவிகுமார், குழந்தைகள் நலக்குழு தலைவர் சரவணன், நன்னடத்தை அலுவலர் சௌதாமணி, வள்ளலார் இல்ல நிர்வாகி சித்ரா கண்ணன் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.

Tags : Dharmapuri district ,
× RELATED தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில்...