அரிமளம் அருகே மிரட்டு நிலை முத்துமாரியம்மன் கோயில் தேர்திருவிழா திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

திருமயம். ஏப்.10: அரிமளம் அருகே ஊரடங்கு அறிவிப்பு காரணமாக முன்கூட்டியே மிரட்டுநிலை முத்துமாரியம்மன் கோயில் தேர்திருவிழா நடைபெற்றது.புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள மிரட்டுநிலை முத்து மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா கடந்த மாதம் 28ம் தேதி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கடந்த 4ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் 10 நாள் திருவிழா தொடங்கியது. அன்றிலிருந்து மண்டகப்படி தாரர்களின் ஒவ்வொரு நாள் திருவிழாவிலும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை, அலங்காரம் நடத்தப்பட்டு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இ்ந்நிலையில் நாளை(11ம்தேதி) காலை பால்குடம் நிகழ்ச்சியும், மாலை பொங்கல் விழா இதனை தொடர்ந்து நாளை மறுநாள் (12ம்தேதி) தேர்த்திருவிழாவும் நடைபெற இருந்தது.

இந்நிலையில் நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா பரவல் அச்சம் காரணமாக தமிழகத்தில் உள்ள கோயில் திருவிழாக்கள் நடத்த இன்று(10ம்தேதி) முதல் தமிழக அரசு தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு மிரட்டுநிலை கோயில் திருவிழா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டதால் நடப்பு வருடத் திருவிழா மீண்டும் நின்று விடும் என கருதிய அப்பகுதி மக்கள் முன்கூட்டியே நேற்று காலை பால்குட நிகழ்ச்சி, மாலை பொங்கல் வைத்து வழிபட்டு தொடர்ந்து தேர்த்திரு விழாவை நடத்தினர். தேர்த்திருவிழாவில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளான மக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். தேர் முத்துமாரியம்மன் கோயில் தேரடியில் இருந்து புறப்பட்டு புதுக்கோட்டை- அரிமளம் சாலை, கொக்கு ஊரணி கரை வழியாக மீண்டும் தேரடியை வந்து அடைந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Related Stories:

>