திருத்தணி பஜார் ரயில்வே கேட் பகுதியில் உள்ள பள்ளத்தால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி

திருத்தணி, ஏப். 9: திருத்தணி பஜார் பகுதியில் தண்டவாளத்தையொட்டி ஆங்காங்கே பள்ளங்கள் காணப்பட்டு வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்கள் அவதிக்கு ஆளாகினற்னர் உடனே ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்திலிருந்து  திருவள்ளூர், அரக்கோணம் மற்றும் திருத்தணிக்கு மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. திருத்தணியில் உள்ள முருகன் கோயில், மத்தூர் அம்மன் கோயில்களுக்கு சென்னையில் இருந்து பக்தர்கள் ரயில்கள் மூலமும்  சென்று வருகின்றனர். இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு திருத்தணி பஜார் பகுதியில் உள்ள  தண்டவாளங்களில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

திருத்தணி கந்தசாமி தெரு, கவரை தெரு இடையே உள்ள ரயில்வே கேட் பகுதியில் தண்டவாளங்கள்  சீரமைக்கப்பட்டன. அப்போது சாலைக்கும் தண்டவாளத்தைக்கும் இடையே சமன்நிலை இல்லாமல் சீரமைத்துள்ளதால் வாகனங்கள் செல்லும்போது பள்ளத்தில் சிக்கிவிடுகிறது. குடும்பத்துடன் பைக்கில்  செல்கின்றவர்கள், சாலைக்கும் தண்டவாளத்துக்கும் இடையே பள்ளத்தில் சிக்கி விழுவதால் காயம் அடைகின்றனர். உயிரிழப்புகளும் நடைபெறுகிறது. சில நேரம் கார்களும் மாட்டிக்கொள்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன் காரணமாக திருத்தணி கீழ் பஜார், அரசு மருத்துவமனை மற்று் அரசு, தனியார் பள்ளிகளுக்கு செல்கின்றவர்கள் தவிக்கின்றனர்.

ரயில்வே கேட் பகுதியில் தண்டவாளத்தை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும் மக்களும் பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். இதனால் அடிக்கடி விபத்துக்கள் நடப்பதை தவிர்க்க முடியவில்லை. இதுபற்றி பொதுமக்கள் கூறுகையில், ”கந்தசாமி தெரு, கவரை தெரு இணைப்பில் உள்ள ரயில்வே கேட்டில் சாலை சரியாக அமைக்கப்படாததால் விபத்துக்கள் நிகழ்கிறது. மேலும் தண்டவாளம் தரையுடன் உள்ளதால் பைக்கில் செல்கின்றவர்கள் வழுக்கிவிழுந்து காயம் அடைகின்றனர். எனவே, தண்டவாளத்தை சீரமைக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றனர்.

Related Stories:

>