ஆவடி தொகுதியின் வாக்குகளை ஒரே அறையில் எண்ணவேண்டும்

திருவள்ளூர், ஏப். 9: தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் கடந்த 6ம் தேதி நடைபெற்றது. அப்போது திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 10 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குப்பதிவு எந்திரங்களை திருவள்ளூரை அடுத்த பெருமாள்பட்டு பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மற்றும் பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டு வருகின்ற 2 தேதி என்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

 நேற்றுமுன்தினம் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பா.பொன்னையா வாக்குச் சாவடிகளில் இருந்து எடுத்து வரப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள்  வேட்பாளர்கள் ஆவடி சா.மு.நாசர், திருவள்ளூர் வி.ஜி.ராஜேந்திரன், திருத்தணி எஸ்.சந்திரன் மற்றும் வேட்பாளர்கள், முகவர்கள்  முன்னிலையில் அறையில் பாதுகாப்பாக வைத்து அந்த அறைகளுக்கு சீல் வைக்கும் பணி நடைபெற்றது.

 அப்போது ஆவடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆவடி சா.மு.நாசர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பொன்னையாவிடம்  புகார் மனு ஒன்றை அளித்தார். மனு விவரம்:   திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளின் பதிவான வாக்குகள் அனைத்தும் பெருமாள்பட்டு பகுதியில் உள்ள  தனியார் கல்லூரி மற்றும் பள்ளி வளாகத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் வைத்து வருகின்ற இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.  இந்நிலையில் ஆவடி தொகுதியில் பதிவான வாக்குகளை இரண்டு அறைகளில் தனித்தனியாக பிரித்து வாக்கு எண்ணும் முயற்சியில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. ஆவடி தொகுதியை விட மாதவரம் தொகுதி பெரிய தொகுதியாகும். அங்கு வாக்காளர்களும் அதிகம், பூத்துகளும் அதிகமாக உள்ளது.

அப்படி இருக்கும்போது அந்தத் தொகுதிக்கு மட்டும் ஒரே அறையில் வாக்கு எண்ணிக்கை  எண்ணப்படுகிறது. ஆனால் ஆவடி தொகுதிக்கு மட்டும் இரண்டு அறைகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதில் எங்களுக்கு ஆட்சேபணையும் உள்ளது. எனவே மாவட்ட தேர்தல் நிர்வாகம் ஒரே அறையில் வாக்குகளை எண்ண முயற்சி செய்ய வேண்டும். இரண்டு அறைகளில் எண்ணுவதை நாங்கள் முழுமையாக ஆட்சேபணை செய்கிறோம். ஏனென்றால் மற்ற தொகுதிகளுக்கு செல்லக்கூடிய வழிகளும் இங்கு உள்ளதால் மற்ற தொகுதிகளில் உள்ள ஏஜென்டுகள் இங்கு மாறி மாறி செல்லும் நிலை உள்ளதால் குழப்பத்தை ஏற்படுத்தும்.

எனவே  ஒரே அறையில் வாக்கு எண்ணும் பணியை நடத்த  தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதான் சரியான முறையாகும். எனவே தேர்தல் ஆணையம் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து ஆவடி தொகுதியில் வாக்கு எண்ணும் பணியை  ஒரே அறையில் வைத்து எண்ண நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. அந்த மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பா.பொன்னையா தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

செய்தியாளர்களை சந்தித்த ஆவடி  தொகுதியின் திமுக வேட்பாளர் ஆவடி  சா.மு.நாசர் ஆவடி சட்டமன்ற தொகுதியில் வழக்கமாக ஒரே அறையில்தான் வாக்கு எண்ணப்படுவதாகவும் ஆனால் இந்த முறை இரண்டு அறைகள் வைத்து வாக்கு எண்ணப்படுவதாக அலுவலர்கள் தெரிவித்திருப்பது, சந்தேகத்தை  எழுப்பியுள்ளதாகவும், அதனால் ஒரே அறையில் வாக்கு என்ன வேண்டுமென மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பொன்னையாவிடம்  புகார் கொடுத்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.  மாநில மாணவர் அணி இணைச் செயலாளர் சி.ஜெரால்டு, ஆவடி நகர பொறுப்பாளர் ஜி.நாராயண பிரசாத், ஒன்றிய செயலாளர் பூவை  எம்.ஜெயக்குமார், வழக்கறிஞர்கள் எஸ்.மூர்த்தி, வித்யாசாகர் என்கிறசின்னா, பொன்.விமல், வ.ஹரி, வின்செட் ஆசீர்வாதம், சசிக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories:

>