கும்மிடிப்பூண்டி அருகே பரபரப்பு ₹7 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்

கும்மிடிப்பூண்டி, ஏப். 9: கும்மிடிப்பூண்டி அருகே சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த  வழியாக ஆந்திரா, பீகார், ஒடிசா, மேற்கு வங்கம், டெல்லி, அரியானா உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்து தினந்தோறும் 100க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் காய்கறி, ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் ஏற்றி ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வருவதும் செல்வதும் வழக்கம். மேலும், ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கஞ்சா, செம்மரக்கட்டை, திருட்டு மணல் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் கடத்தி வரப்படுவதும் வழக்கமாக உள்ளது. இதுசம்பந்தமாக பல வழக்குகள் அந்த அந்த காவல்நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை சத்தியவேடு சாலையில் கவரப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகேசன் தலைமையிலான போலீசார் நேற்றுமுன்தினம் இரவு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சுமார் இரவு 12 மணி அளவில், சப் - இன்ஸ்பெக்டர் அழகேசனுக்கு, பன்பாக்கம் ஊராட்சி குத்தானம்பேடு விவசாய போர்வெல் பகுதியில் தினமும் இரவு நேரத்தில் சொகுசு கார் ஒன்று வந்து செல்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற  போலீசார் அந்த பகுதியை சுற்றி வளைத்தனர். மேலும், அங்கு உள்ள போர்வெல் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த குடோனில் சோதனை நடத்தினர், அப்போது அங்கு சில மூட்டைகள் கிடப்பதை பார்த்துள்ளனர். அப்போது,  போலீசார் நடத்திய விசாரணையில் அப்போதுதான் சொகுசு கார் ஒன்று குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை இறக்கி விட்டு சென்றது தெரிய வந்தது.

அந்த மூட்டையை திறந்து பார்க்கும்போது அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், பான்பராக் உள்ளிட்ட போதை பொருட்கள் அதில் இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் 7 லட்சம் மதிப்புள்ள 700 கிலோ  போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.  

மேலும்,  பதுக்கலில் ஈடுபட்ட நபரை விசாரணை செய்ததில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பிரபத்சிங் (30) என்பதும், இவர் கும்மிடிப்பூண்டி பஜாரில் கடை வைத்து நடத்தி வருவதும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்து குட்கா போதைப் பொருட்கள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது.  எந்தெந்த பகுதிகளுக்கு எல்லாம் விநியோகம் செய்யப்படுகிறது என பல்வேறு கோணங்களில்  தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>