திருச்சி அரசு மருத்துவமனையில் 450 படுக்கைகளுடன் கொரோனா வார்டு

திருச்சி, ஏப்.9: இரண்டாம் அலையில் அதிகரிக்கும் தொற்றால் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் 450 படுக்கைகளுடன் கொரோனா வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் எந்தவித அறிகுறியும் இல்லாமல் கொரோனா பரவுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் இரண்டாம் அலையால் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் 450 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதில் 280 படுக்கைகள் ஆக்ஸிஜன் வசதியுடன் சிகிச்சை பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 155 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 60க்கும் மேற்பட்டோர் செயற்கை சுவாசத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோய் தொற்று தொடர்பாக சிகிச்சை பெற்று வந்த திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 32 பேர், புதுகை மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேர், கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 35 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

கொரோனா முதல் அலையின்போது சளி, தொண்டை வலி, உடல் அசதி போன்றவை கொரோனா அறிகுறிகளாக இருந்தது. ஆனால் தற்போது இரண்டாவது அலையில் எந்தவித அறிகுறியும் இல்லாமல் வயிற்றுப்போக்கு, வாந்தி, அசதி மட்டும் இருப்பவர்களுக்கு சோதனை செய்யும்போது நெஞ்சு சளி, கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு வருகிறது. சிலருக்கு எடுத்த உடனேயே மூச்சுத்திணறல் ஏற்பட்டு அனுமதிக்கப்படுவோருக்கும் கொரோனா தொற்று ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் வேகமாக மற்றவர்களுக்கு பரவும் தன்மை உடையதாக உள்ளது.

இதனால் ஒரு குடும்பத்தில ஒருவருக்கு வந்தால், குடும்பத்தினருக்கும் மேற்கொள்ளப்படும் சோதனையில் அவர்களும் பாதிக்கப்பட்டுள்ளது தெரிகிறது. குரூப் குரூப்பாக பரவுவது முதல் அலையில் கிடையாது. இரண்டாவது அலையில் தான் வேகமாக பரவுகிறது என மருத்துவர்கள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனால் எந்தவித உடல் உபாதைகள் இருந்தாலும் மருத்துவரை உடனடியாக அணுகி சிகிச்சை பெறுவதே நல்லது எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

More
>