×

இலுப்பூர் சுற்று வட்டார பகுதியில் களையிழந்த திருவிழாக்கள்

இலுப்பூர், ஏப் .9: தேர்தல் நடத்தை விதியினாலும், கொரேனா தொற்று காரணமாக அரசு அறிவித்துள்ள விதிமுறையின்படி விழாக்கள் நடத்த முடியாமல் போனதால் இலுப்பூர் பகுதிகளில் திருவிழாக்கள் கலை இழந்தன. இலுப்பூர் பகுதியில் அம்மன் கோயில்களில் மாசித்திருவிழா ஆண்டு தோறும் பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கி தேரோட்டம் வரை சிறப்பாக நடைபெறும். சென்ற ஆண்டு கொரோனா காரணமாக இலுப்பூர் பகுதிகளில் தேரோட்டம் நடைபெறும் பிரசித்தி பெற்ற கோயில்களில் தேரோட்டம் நடைபெறவில்லை. இந்த ஆண்டு அம்மன் கோயில்களில் மாசித்திருவிழா துவங்கி நடைபெற்று வருகிறது.

விழாக்களில் இன்னிசை கச்சேரி, புராதன நாடகம், கரகாட்டம் போன்ற பல்வேறு கலைநிகழச்சிகள் காலம் காலமாக நடைபெற்று வருகிறது. கிராம பகுதியில் உள்ள கோயில்களில் நடைபெறும் விழாக்களில் கலை நிகழச்சிகள் விடிய விடிய நடைபெறும். இந்த விழாக்களில் சுற்று பகுதியில் உள்ள பொதுமக்கள் கோயிலுக்கு குடும்பத்துடன் வந்து சுவாமியை தரிசனம் செய்து விட்டு விடிய விடிய புராதன நாடகம் போன்ற கலை நிகழச்சிகளை கண்டுகளித்து செல்வார்கள். கிராமப் புறங்களில் நடைபெறும் புராமன நாடகம் மற்றும் கரகாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் பொதுமக்களிடம் வரவேற்பு இல்லாமல் நலிவடைந்து செல்லும் நிலையில், இந்த வருடம் வரும் விழாக்காலங்களான பங்குனி மாதத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததாலும், இரவு 10 மணிக்கு மேல் ஒலி பெருக்கிகள் ஒலிக்க கூடாது என்பதாலும் விழாக்களில் நடைபெறும் கரகாட்டம் மற்றும் புராதன நாடகம் போன்ற கலை நிகழச்சிகள் நடைபெற வில்லை.

இதனால் கோயில்களில் நடைபெறும் விழாக்கள் கலை இழந்து போயின். குறிப்பாக இலுப்பூர் பகுதியில் உள்ள இருந்திரப்பட்டி முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா கடந்த மாதம் 28ம் தேதியும், இலுப்பூர் தரம்தூக்கி பிடாரியம்மன் கோயில் புச்சொரிதல் விழா கடந்த 2 தேதியும் நடைபெற்றது. விழாவின் போது சுற்று வட்டார பகுதியில் உள்ள கிராமத்தார்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பல்லாக்குகளில் பூக்களை ஊர்வலமாக கொண்டு வந்து அம்மனுக்கு சாற்றி விழா பாடுநடத்துவர். இதையொட்டி கலை நிகழ்ச்சிகள் நடத்த படுவது காலங்காலமாக நடைபெற்று வருகிறது. இரவு 10 மணிக்கு மேல் எந்த நிகழ்ச்சிகளும் நடத்த கூடாது என தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததாலும் இன்று முதல் திருவிழாக்கள் நடத்துவதை கொரோனா காரணமாக அரசு தடைவிதித்துள்ளதாலும் இலுப்பூர் பகுதிகளில் உள்ள கோயில் விழாக்கள் கலை இழந்து போயின. இதனால் பக்தர்களும் உற்சாகமின்றி உள்ளனர்.

Tags : Iluppur ,
× RELATED இலுப்பூரில் எஸ்ஐ கையெழுத்தை போலியாக...