காரைக்கால் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு

காரைக்கால், ஏப். 9: கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் காரைக்கால் பகுதியில் இளநீர் விற்பனை அதிகரித்துள்ளது. காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த வெயிலை தாங்க முடியாமல் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பெரிதும் சிரமப்பட்டனர். காரைக்காலில் தேர்தல் களம் ஒருபக்கம் சூடு பறக்க நடந்தாலும், மாவட்டம் முழுவதும் வெயிலின் தாக்கம் சூடுபறக்கிறது. காரைக்கால், நிரவி, திருப்பட்டினம், கோட்டுச்சேரி, நெடுங்காடு, திருநள்ளாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பழங்களையும், குளிர்பானங்களையும் நாடி செல்கின்றனர். காரைக்கால் மாவட்டத்தில் உள்ள குளிர்பான கடைகளை தேடி பொதுமக்கள் செல்கின்றனர். மேலும் தர்பூசணி விற்பனை செய்யும் கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோத துவங்கியுள்ளது.

இந்நிலையில் அனைத்தையும் மிஞ்சும் வகையில் இளநீர் விற்பனை அதிகரிக்க துவங்கியுள்ளது. வெயிலின் சூட்டை தணிக்கும் அருமருந்தாக இளநீர் உள்ளதால் அதன் விற்பனையும் அதிகரித்து வருகிறது. கடைகள், சாலையோரங்களில் வைத்து விற்கப்படும் இளநீர்களை பொதுமக்கள் வாங்கி விரும்பி குடித்து வருகின்றனர். இதனால் இளநீர் விற்பனை வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories:

>