×

கொள்ளிடம் ரயில்வே பாலம் அருகே அகற்றப்படாத குப்பைகளால் கடும் துர்நாற்றம்

கொள்ளிடம், ஏப்.9: கொள்ளிடம் ரயில் பாலம் அருகே குப்பை கொட்டப்படும் இடத்தை இடமாற்றம் செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ரயில் பாலம் அருகே கொள்ளிடம் சோதனைச் சாவடியில் இருந்து சந்தப்படுகை, திட்டுப்படுகை, முதலைமேடு, அளக்குடி, மகேந்திரப்பள்ளி வழியாக காட்டூர் செல்லும் கொள்ளிடம் ஆற்றின் வலது கரை சாலையில் தினந்தோறும் குப்பைகள் குவியல் குவியலாக கொட்டப்பட்டு வருகிறது. இந்த இடத்தில் தினந்தோறும் பல ஊராட்சிகளை சேர்ந்த குப்பைகள் கொட்டப்பட்டு பின்னர் அவ்வப்போது எரிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஊராட்சியிலும் சேரும் குப்பைகளை சேமித்து மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் என்று தரம் பிரிப்பதற்கு தூய்மை காவலர்கள் பணியில் இருந்து வருகின்றனர். அவர்கள் குப்பைகளை தரம் பிரித்து அதனை மறுசுழற்சிக்கு உரமாக மாற்றி விற்பனை செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஆனால் முறைப்படி ஊராட்சிகளில் குப்பைகளை தரம் பிரிக்காமல் அவைகளுடன் இறந்த விலங்கினங்கள் மற்றும் அழுகிய காய்கறிகள் உள்ளிட்ட அனைத்து வகையான குப்பைகளுடன் சேர்த்து கொள்ளிடம் ஆற்றுப் பாலம் அருகே சாலையோரம் கொட்டி வருகின்றனர். மனித கழிவுகளையும் டேங்கர் லாரிகள் மூலம் கொண்டு வந்து அதே இடத்தில் கொட்டி வருகின்றனர். இதனால் சுகாதாரம் பாதிக்கப்படுவதுடன் துர்நாற்றம் வீசுகிறது. கொள்ளிடம் ஆற்றில் இந்த அசுத்தமான குப்பைகளும் இறந்த விலங்கினங்களும் போடப்படுகிறது. இதனால் நீரும் மாசுபடுகிறது. சாலை ஓரத்திலேயே குப்பைகள் குவியலாக கொட்டப்பட்டு வருவதால் அழுகிப்போன விஷ தன்மை வாய்ந்த சில காய்களை ஆடு மாடுகள் தின்று விடுகின்றன. இதனால் நோய்வாய்ப்பட்டு கால்நடைகள் இறந்து வருகின்றன.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் சார்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு கொள்ளிடம் ரயில் பாலம் அருகே குப்பை கொட்டப்படும் இடத்தை மாற்றி நவீன முறையில் குப்பைகளை தரம் பிரித்து அவைகளை மறுசழற்சிக்கு பயன்படுத்தும் வகையில் 16 லட்சம் மதிப்பீட்டில் இயந்திரம் வைக்கப்பட உள்ளதாக ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை. எனவே கொள்ளிடம் ஆற்றின் கரையோர கிராமங்களில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி கொள்ளிடம் ரயில் பாலம் அருகே குப்பை கொட்டுவதை தடை செய்ய வேண்டும். அரசு குறிப்பிட்டது போல குப்பை கொட்டுவதற்கு வேறு இடத்தை தேர்வு செய்து அங்கு குப்பைகளை மறுசுழற்சி செய்யும் வகையில் நவீன இயந்திரங்களை உடனே பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : Kollidam ,
× RELATED திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் குளித்த இளைஞர் நீரில் மூழ்கி பலி