×

ஊட்டி அரசு மகப்பேறு மருத்துவமனையில் இருந்து கர்ப்பிணி பெண்கள் திடீரென கோவைக்கு அனுப்பி வைப்பு கருவிகள் பழுதானதால் நடவடிக்கை


ஊட்டி, ஏப். 9: ஊட்டியில் உள்ள சேட் தலைமை அரசு மருத்துவமனை ஆபரேஷன் தியேட்டரில் கருவிகள் பழுதானதால் கர்ப்பிணிப் பெண்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள சேட் அரசு தலைமை மகப்பேறு மருத்துவமனையில் ஏராளமான கர்ப்பிணி பெண்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று இரவு இந்த மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக காத்திருந்த பல கர்ப்பிணி பெண்கள் ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு திடீரென கொண்டு செல்லப்பட்டனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உறவினர்கள் அச்சத்திற்குள்ளாகினர். தற்போது கொரோனா தீவிரமடைந்து வரும் நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் கோவைக்கு அழைத்துச் செல்லப்படுவதாகவும் வதந்திகள் பரவியது. ஆனால் இதனை மருத்துவமனை நிர்வாகம் மறுத்தது. மேலும் ஊட்டி சேட் தலைமை அரசு மகப்பேறு மருத்துவமனை ஆபரேஷன் தியேட்டரில் உள்ள சில கருவிகள் பழுதடைந்ததால் அங்கு மகப்பேறு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. எனவே கர்ப்பிணிகளின் நலன் கருதி உடனடியாக கோவையில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கும், ஊட்டியில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கும் கர்ப்பிணிகளை ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்கிறோம். வேறு எந்த காரணங்களும் இல்லை, என தெரிவித்தனர். எனினும் தொடர்ந்து பல ஆம்புலன்ஸ்கள் சேட் மகப்பேறு மருத்துவமனையில் இருந்து வெளியே சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Ooty Government Maternity Hospital ,Coimbatore ,
× RELATED பறக்கும் படையால் வியாபாரம் பாதிப்பு