×

வாக்கு எண்ணிக்கை மையங்களில் தீயணைப்பு வீரர்களுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு பணி

ஈரோடு, ஏப். 9:  ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை பவானி, அந்தியூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையமாக சித்தோடு ஐ.ஆர்.டி.டி. கல்லூரியும், கோபி, பவானிசாகர் ஆகிய 2 தொகுதிகளுக்கு கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையமாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு பாதுகாப்பு அறையில் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மையங்களில் டிஎஸ்பி தலைமையில் 3 இன்ஸ்பெக்டர்கள் மேற்பார்வையில் துணை ராணுவம், சிறப்பு காவல் படையினர் என மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் தீ மற்றும் அசாம்பாவித சம்பவங்களை தடுக்க 2 தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டு 38 தீயணைப்பு வீரர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து ஈரோடு மாவட்ட தீயணைப்பு அலுவலர் (டி.எப்.ஓ.) புளுகாண்டி கூறியதாவது: சித்தோடு ஐ.ஆர்.டி.டி. கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள 6 பாதுகாப்பு அறையின் முன் 6 வீரர்களும், வாக்கு எண்ணிக்கை மையத்தின் வளாகத்தில் ஒரு தீயணைப்பு வாகனமும் அதில் ஒரு நிலைய அலுவலர் தலைமையில் 11 வீரர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், கோபி கலை அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் 2 பாதுகாப்பு அறையில் 2 வீரர்களும், ஒரு தீயணைப்பு வாகனம் நிறுத்தப்பட்டு தீயணைப்பு வீரர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இந்த 2 மையங்களிலும் 38 வீரர்கள் சுழற்சி முறையில் வீரர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
× RELATED 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்த 2 மையங்கள் அமைப்பு