×

கொரோனா 2வது அலை எதிரொலி போடி பரமசிவன் கோயிலில் உள்பூஜை

போடி, ஏப். 9: போடி அருகே, மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பழமை வாய்ந்த பரமசிவன் கோயில் உள்ளது. தென் திருவண்ணாமலை என அழைக்கப்படும் இக்கோயிலில், அமாவாசை, பவுர்ணமி காலங்களில் பக்தர்கள் கிரிவலம் வருவர். இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில், சித்திரை மாதம் 2ம் நாள் விழா தொடங்கி 8 நாட்கள் தொடர்ந்து நடக்கும். கடந்தாண்டு கொரோனா பரவலால் திருவிழா கொன்டாடப்படவில்லை. இந்நிலையில், இந்தாண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு, போடி 22வது வார்டு பொன்னம்பலம் தெரு, பெரியாண்டவர் கோயிலில் கொடிமரத்துக்கு சிறப்பு பூஜை செய்து, கொட்டகுடி ஆற்றில் புனிதநீர் எடுத்து வழிபட்டனர். போடி ஜமீன்தார் வடமலை முத்து சீலராஜைய பாண்டியர் தலைமையில் பெரியாண்டவர் கோயிலிருந்து காமராஜர் சாலை மற்றும் முந்தல் சாலையில் வழியாக சென்று மலையடிவாரத்தில் உள்ள பரமசிவன் கோயிலில் கொடிமரம் நேற்று ஏற்றப்பட்டது. வழி நெடுகில் பக்தர்களும் சேர்ந்து ஊர்வலமாக கொடி மரத்தை சுமந்து சென்றனர். இதனிடையே, கொரோனா 2வது அலை பரவலால், கோயில் திருவிழாவுக்கு அரசு தடை விதித்துள்ளது. இது குறித்து ஜமீன்தார் கூறுகையில், ‘பரமசிவன் மலைக்கோயில் 8 நாள் சித்திரை திருவிழாவிற்கு நேற்று கொடி ஏற்றப்பட்டது. இதனிடையே அரசு தடை விதித்துள்ளதால், 15ம் தேதியில் இருந்து 21ம் தேதி வரை கோயிலில் பூஜை நடக்கும்; திருவிழா நடக்காது’ என்றார்.

Tags : Corona ,Paramasivan Temple ,
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...