×

தேனி மாவட்டத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு பொதுமக்கள் அச்சம்

தேனி, ஏப். 9: தேனி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 4 மாதங்களுக்கு பிறகு 100 பேரைத் தாண்டியதால் பொதுமக்களிடையே அச்சம் உருவாகி உள்ளது. தேனி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு கடந்தாண்டு மார்ச் மாதம் தொடங்கி, ஆகஸ்டில் உச்சம் தொட்டது. பின்னர், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் படிப்படியாக குறைந்தது. இதன்படி, இதுவரை தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு 17 ஆயிரத்து 408 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 17 ஆயிரத்து 91 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்தனர். இதுவரை 207 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது, கொரோனா பாதிக்கப்பட்ட 110 பேர் தேனி அரசினர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  கடந்த ஆண்டு மாவட்டத்தில் 13 இடங்களில் கொரோனா சிகிச்சை மையங்கள் செயல்பட்ட நிலையில் தற்போது தேனி அரசினர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மட்டும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இம்முறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மையங்கள் மீண்டும் திறக்க சுகாதாரத்துறை ஏற்பாடுகளை செய்து வருகிறது.

கடந்த சில மாதங்களாக நாள்தோறும் மிகக்குறைந்த அளவில் கொரோனா பாதிப்பு இருந்தது. ஆனால், கடந்த ஒரு மாத காலமாக திடீரென கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த இரு தினங்களாக 25 பேர், 15 பேர் என பாதிப்பு ஏற்படத் தொடங்கியுள்ளது தேனி மாவட்ட மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தபோது, தனியார் விடுதிகளில் தங்கியதற்கான பில்தொகை, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கிய ஒப்பந்தகாரர்களுக்கு வழங்க வேண்டிய பணம் ஆகியவை வழங்காமல் இழுத்தடித்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், தங்கும் விடுதிகள், உணவு தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து ஒத்துழைப்பு கிடைக்குமா என்ற அச்சம் சுகாதாரத் துறை மத்தியில் உள்ளது.

Tags : Theni district ,
× RELATED வெளிமாநில வரத்து அதிகரிப்பு வருசநாட்டில் தேங்கும் தேங்காய்கள்