மாவட்டம் முழுவதும் 153 தேர்தல் விதிமீறல் வழக்குகள் பதிவு

சிவகங்கை, ஏப்.9: சிவகங்கை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக இதுவரை 153 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு பிப்.26ல் வெளியானதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 3 பறக்கும் படைக்குழு, 3 நிலையான கண்காணிப்புக்குழு, 4 வீடியோ மதிப்பீட்டுக்குழு, ஒரு வீடியோ பார்வையிடும் குழு 24மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

பல்வேறு நடத்தை விதிகள் இருந்தாலும் வாகன பரிசோதனை மற்றும் கட்சியினர் நடத்தக்கூடிய கூட்டங்களில் விதிமுறை மீறல் முக்கியமானதாக இருந்தது. இதுபோன்ற சோதனைகள் எதிர்க்கட்சிகள் நடத்தும் கூட்டங்கள், அவர்களுடைய வாகனங்களில் மட்டுமே நடத்தப்பட்டதாகவும் மத்திய, மாநில அரசுகளான பிஜேபி, அதிமுக விதிமீறல்களை கண்டுகொள்ளாமல் பறக்கும்படை அதிகாரிகள் இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

எதிர்க்கட்சிகள் நடத்தும் தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் உள்ளே புகுந்து சோதனை செய்த அதிகாரிகள் அதிமுக, பிஜேபி நடத்தும் கூட்டங்களில் வெளியில் நின்று விட்டு கண்டும் காணாதது போல் சென்றனர். இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக இதுவரை 153 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் 46 வழக்குகள் விதிமுறைகளை மீறியதாக பதிவு செய்யப்பட்டுள்ளன. காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் 45 வழக்குகள், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் 32 வழக்குகள், மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் 30 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. பணம், பொருட்கள் கொடுத்ததாக ஆறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேர்தல் விதிமுறைகளை மீறி தனியார் சிலர் தங்களது வீட்டு நிகழ்ச்சிகளுக்கு பிளக்ஸ் வைத்தது, ஆர்ப்பாட்டம் நடத்தியது உள்ளிட்ட வழக்குகளும் மற்றும் அரசியல் கட்சிகள், அமைப்புகள் மீதும் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Related Stories:

>