பரமக்குடி ரயில் நிலையத்தில் பூட்டியே கிடக்கும் கழிப்பறை அவதிப்படும் பயணிகள்

பரமக்குடி, ஏப்.9: பரமக்குடி ரயில் நிலையத்தில் தண்ணீரின்றி கழிப்பறை பூட்டி கிடப்பதால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பரமக்குடி ரயில் நிலையம் மதுரை-ராமேஸ்வரம் மீட்டர்கேஜ் ரயில்பாதை கடந்த நான்கு வருடத்திற்கு முன்பு அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டது. இங்கு பரமக்குடி, இளையான்குடி, முதுகுளத்தூர், கமுதி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான பயணிகள் தினமும் வருகின்றனர். அகலப்பாதையாக மாற்றப்பட்ட நாள் முதல் தண்ணீர் வசதி இல்லாததால் கழிப்பறை பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ரயில் வருகைக்காக நீண்டநேரம் காத்திருக்கும் பயணிகள் அவசரத்துக்கு வழியின்றி பரிதவிக்கின்றனர்.

 வேறுவழியின்றி குழந்தைகள், முதியோர்கள் ஸ்டேஷன் வளாகத்தை திறந்தவெளி கழிப்பிடமாக மாற்றி வருகின்றனர். பெண் பயணிகளின் நிலை பரிதாபமாக உள்ளது. அதிகப்படியான வருமானத்தை அள்ளித்தரும் பரமக்குடி ரயில் நிலையத்தில் தண்ணீர் வசதி இல்லாமல் கழிப்பறை பூட்டி வைக்கப்பட்டுள்ளது வேதனையளிப்பதாக உள்ளது. ரயில் பயணிகளின் நலன்கருதி தண்ணீர் வசதியுடன் கழிப்பறையை பயன்பாட்டுக்கு கொண்டுவர ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியபோது: அகல ரயில்பாதையாக மாற்றப்பட்டதில் இருந்து தண்ணீர் வசதி செய்யப்படவில்லை. இதனால் குடிநீருக்கு மட்டும் லாரியில் தண்ணீரை விலைக்கு வாங்கி, ஒரேயொரு குடிநீர் தொட்டியில் தினமும் நிரப்பி வைக்கிறோம் என்றார்.

Related Stories:

>