×

தேர்தல் பணியில் புறக்கணிப்பு செல்லூர் ராஜூவை கண்டித்து பகுதிச் செயலாளர் பதவி விலகல் மதுரை மாநகர் அதிமுகவில் குழப்பம்

மதுரை, ஏப்.9: அமைச்சர் செல்லூர் ராஜூவை கண்டித்து மதுரை மாநகர் அதிமுக பகுதிச்செயலாளர் பதவி விலகியுள்ளார். மதுரை மாநகர் மாவட்ட அதிமுகவில் 100 வார்டுகள் உள்ளன. இதில் பழைய 72 வார்டுகளுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ மாவட்ட செயலாளராக உள்ளார். 8 வார்டுகளுக்கு ஒரு பகுதிச்செயலாளர் என நியமிக்கப்பட்டனர். அந்த பகுதி செயலாளர் கீழ் 8 வார்டுகளின் செயலாளர்கள் பணியாற்ற வேண்டும். இதனால் அதிக அதிகாரம் படைத்ததாக பகுதிச் செயலாளர் பதவி இருந்தது. இந்நிலையில் ஒரு சில பகுதிச் செயலாளர்கள் அமைச்சர் செல்லூர் ராஜூவை மீறி, அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் ஆதரவாளராக மாறினர். இதனால் கட்சி பணியில் செல்லூர் ராஜூவுக்கு பிரச்சனை ஏற்பட்டது. எனவே தேர்தல் பணிக்காக அமைச்சர் செல்லூர் ராஜூ கடந்த மாதம் தற்போதுள்ள பகுதிச்செயலாளர்களை புறக்கணித்துவிட்டு, 2 வார்டுக்கு ஒரு பகுதிச்செயலாளர் என தன்னுடைய ஆதரவாளர்களை நியமித்தார்.

இதற்கு பகுதிச்செயலாளர்கள் அண்ணாநகர் முருகன், வண்டியூர் கணேசன், பிஎஸ் கண்ணன் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தேர்தல் பணியில் அதிமுகவினரிடையே குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில் செல்லூர் ராஜூக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று மதுரை மாநகர் 3ம் பகுதி செயலாளர் பி.எஸ்.கண்ணன் பரபரப்பான நோட்டீஸ் மதுரையில் ஓட்டினார். அதில், கட்சி பணியாற்ற அனுமதி தந்த ஒருங்கிணைப்பாளருக்கு நன்றி தெரிவித்தும், தான் இன்று முதல் பகுதிச்செயலாளர் பதவியில் இருந்து விலகி கொள்வதாகவும் தெரிவித்திருந்தார். இவரின் போஸ்டரை கண்ட அதிமுக தொண்டர்கள் பலர் அதிர்ச்சி அடைந்தனர்.   

Tags : Madurai Bailiff ,AIADMK ,Cellur Raju ,
× RELATED தேர்தல் பரப்புரைக்காக அமித்ஷா, மோடி என...