×

வாக்கு இயந்திர அறையை கண்காணிக்க 504 முகவர்களுக்கு அனுமதி வழங்கல் சுழற்சி முறையில் மையத்தில் தங்கி கண்காணிப்பார்கள்

மதுரை, ஏப்.9:  பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ள வாக்கு இயந்திரம் உள்ள அறையை இரவு, பகல் என கண்காணிக்க வேட்பாளர்களின் 504 முகவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த 6ம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் மே 2ம் தேதி எண்ணிப்பட உள்ளது. இதற்கான வாக்கு பதிவு இயந்திரங்கள் எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு  அறையில் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்திற்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அறை முன்பாக மத்திய பாதுகாப்பு படை வீரர்களும், 4 சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் உள்ளது. பூட்டி சீல் வைக்கப்பட்ட அறையை தேர்தல் நடத்தும் அலுவலர் தினமும் 3 முறை சென்று ஆய்வு செய்து, அதற்கான பதிவேட்டில் கையெழுத்து போட வேண்டும். அதேபோன்று தேவைப்பட்டால், கலெக்டர் சென்று பார்வையிடலாம்.

மேலும், வேட்பாளர்களும், இந்த அறையை கண்காணிக்கும் விதமாக முகவர்களை  நியமித்துள்ளனர். அவர்கள் மையத்தின் ஒரு பகுதியில் அமர்ந்து, அங்குள்ள டிவி மூலம், சிசிடிவி கேமரா காட்சிகளை கண்காணித்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஒரு வேட்பாளருக்கு 3 முகவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை தேர்தல் ஆணையம் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் கண்காணிப்புக்காக சுழற்சி முறையில், ஒரு வேட்பாளருக்கு ஒருவர் மட்டுமே அந்த கண்காணிப்பு மையத்தில் தங்கி இருக்க முடியும்.

மதுரை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. தேர்தலில் திமுக, அதிமுக, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட், பாஜ உள்பட 168 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மேலூர், மதுரை கிழக்கு ஆகிய தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை ஒத்தக்கடை விவசாய கல்லூரியில் நடைபெறுகிறது. மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மத்தி, மதுரை மேற்கு ஆகிய நான்கு தொகுதிகளுக்கு மருத்துவ கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. திருப்பரங்குன்றம், திருமங்கலம் தொகுதிகளுக்கான எண்ணிக்கை  தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரியிலும், சோழவந்தான், உசிலம்பட்டி ஆகிய தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை கீழக்குயில்குடி அண்ணா பல்கலைக்கழகத்திலும் நடக்கிறது. ஒரு வேட்பாளருக்கு 3 முகவர்கள் வீதம் மொத்தம் 504 முகவர்களுக்கு வாக்குபெட்டி கண்காணிப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் சுழற்சி முறையில் மையத்தில் தங்கி கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

Tags :
× RELATED 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு