×

ராசிபுரம் அருகே கோயில் திருவிழாவில் அடிதடி 4 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை

ராசிபுரம், ஏப்.9:  ராசிபுரம் அருகே, கோயில் திருவிழாவில் அடிதடி தகராறில் ஈடுபட்ட 4 பேருக்கு, 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த கவுண்டம்பாளையம் பகுதியில், கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல் 15ம்தேதி கோயில் திருவிழா நடந்தது. விழாவின் இறுதி நிகழ்ச்சியான மஞ்சள் நீராட்டு விழாவில், திடீரென கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் 4 பேர் காயமடைந்தனர். படுகாயமடைந்த ஒருவர் ராசிபுரம் மற்றும் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து சண்முகம்(33) என்பவர் கொடுத்த புகாரின் பேரில், ராசிபுரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு ராசிபுரம் சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர்கள் தங்கதுரை மற்றும் விஜயன் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி சரவணன், நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில், கோயில் திருவிழாவில் அடிதடியில் ஈடுபட்டதாக சுப்ரமணி(60), அவரது மகன்கள் கனகராஜ்(35), கௌரிசங்கர்(28), சுப்ரமணியின் தம்பி கந்தசாமி(40) ஆகிய 4 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், தலா ₹15 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.

Tags :
× RELATED மாநில அளவிலான கைப்பந்து போட்டி