×

ஓசூர் பகுதியில் முட்டைகோஸ் விலை வீழ்ச்சி

ஓசூர், ஏப்.9: ஓசூர் பகுதியில் முட்டைகோஸ் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். ஓசூரில் நல்ல மண்வளம், சீரான தட்பவெப்பம் நிலவுவதால், இங்கு அதிகளவில் காய்கறிகள், மலர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக, இங்கு விளையும் முட்டைகோஸ்களை, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பவில்லை. கடந்த 2 மாதத்திற்கு முன்பு 100 கிலோ கொண்ட மூட்டை ₹3 ஆயிரத்திற்கு விற்பனையானது. தற்போது 100 கிலோ உள்ள மூட்டை ₹80 முதல் ₹100க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘தற்போது கொரோனா தொற்றால் வாகன போக்குவரத்து சரிவர இல்லை. மேலும், வியாபாரிகள் வருவதில்லை. ஆண்டு தோறும் இம்மாதத்தில் ஓசூர் பகுதியில் விளைவிக்கப்படும் முட்டைகோஸ் கொல்கத்தாவிற்கு அதிக அளவில் அனுப்பப்படும். ஆனால், இம்முறை சரிவர விற்பனைக்கு அனுப்ப முடியவில்லை. மேலும் கொரோனா தொற்று மீண்டும் பரவ துவங்கி உள்ளதால் வெளிமாநில, மாவட்ட வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்,’ என்றனர்.



Tags : Hosur ,
× RELATED ஓசூர் மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு