×

தர்மபுரியில் வாக்குச்சாவடி மையங்களாக செயல்பட்ட பள்ளிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்

தர்மபுரி, ஏப்.9: தர்மபுரி மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்களாக செயல்பட்ட அரசு பள்ளிகளில் பிளஸ்2 மாணவர்கள் வருகையையொட்டி முன்னெச்சரிக்கையாக கிருமிநாசினி தெளிக்கும் பணி நேற்றும் நடந்தது.
தர்மபுரி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் கடந்த 6ம் தேதி நடந்து முடிந்தது. இதையொட்டி, அந்தந்த பகுதிகளுக்குட்பட்ட பள்ளிகள், கல்லூரிகள், அங்கன்வாடி மையங்கள், அரசு அலுவலகங்கள் வாக்குச்சாவடி மையங்களாக பயன்படுத்தப்பட்டன. கொரோனா தொற்று காரணமாக, பள்ளிகள் மூடப்பட்டு இருந்தாலும், பிளஸ்2 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வரும் 3ம் தேதி முதல் பொதுத்தேர்வு நடக்கிறது. இதற்காக அவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பள்ளிகள் வாக்குச்சாவடி மையங்களாக பயன்படுத்தப்பட்டதால், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பள்ளிகள் முழுவதும், கிருமி நாசினி திரவம் கொண்டு சுத்தம் செய்யும் பணி நேற்று முன்தினம் முதல் தீவிரமாக நடக்கிறது. இதன் காரணமாக, தர்மபுரி மாவட்டத்தில் சில பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாணவ, மாணவிகள் வகுப்பறைகள் மற்றும் கழிவறை, பள்ளி வளாகம் முழுவதும் கிருமிநாசினி திரவம் தெளித்து சுத்தம் செய்யும் பணி நடந்தது. நேற்று காலை தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. மேலும், பிளஸ்2  மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கியது.

Tags : Dharmapuri ,
× RELATED தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில்...