×

அரூர் பகுதியில் செங்கல் சூளைகளுக்கு அனுப்பப்படும் பனைமரங்கள்

அரூர், ஏப்.9: அரூர் பகுதிகளில் பனைமரங்களை வெட்டி, செங்கல் சூளைகளில் விறகுக்காக அனுப்பும் அவலம் உள்ளது.தமிழக அரசின் மாநில மரமான பனைமரத்தின் அனைத்து பகுதிகளும் பயன் தரும். கடும் வறட்சியையும் தாங்கி வளரக்கூடிய இம்மரத்தின் வேர் முதல் மட்டை வரை அனைத்து பகுதிகளும் பல்வேறு பயன்களை தருகின்றன. கடந்த 50 ஆண்டுளுக்கு முன்பு தமிழகத்தில் 30 கோடி பனைமரங்கள் இருந்தன. ஆனால், தற்போது தமிழகத்தில் 5 கோடி பனை மரங்களே உள்ளன. இவற்றுள் 50 சதவீத மரங்கள் நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ளது. பனை மரமானது ஓராண்டில் 150 லிட்டர் பதநீர் தரும். பனைமரங்களின் பகுதிகளை கொண்டு தயாரிக்கப்படும் பொருட்களை அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம், இந்தியாவிற்கு ஆண்டுதோறும் ₹200 கோடிக்கும் மேல் அந்நிய செலாவணி வருவாய் கிடைக்கிறது.

தற்போது பனைமரத்தில் இருந்து கள் இறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், பனைமரங்கள் விறகுக்காக வெட்டப்பட்டு வருகின்றன. ஒரு டன் பனை மரம் ₹2500 வரை செங்கல் சூளைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘தற்போது தமிழகத்தில் கள் இறக்குவது தடை செய்யப்பட்டுள்ளதால், பனை மரங்களை செங்கல் சூளைகளுக்கும், சுண்ணாம்பு சூளைகளுக்கும் வெட்டி அனுப்பப்பட்டு வருகிறது. தினந்தோறும் லாரிகளில் ஏற்றி பிற மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. இதனால் பனை மரங்கள் சிறிது சிறிதாக அழிந்து வருகிறது. இதே நிலை நீடித்தால், குழந்தைகளுக்கு தமிழகத்தில் தேசிய மரத்தை நிழற்படங்களாக மட்டுமே காட்ட கூடிய நிலை ஏற்படும். இதனை தடுக்க பதநீரை அரசு கொள்முதல் செய்து விற்பனை செய்வதுடன், தேசிய மரமான பனை மரங்களை காக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.





Tags : Arur ,
× RELATED டூவீலர்கள் மோதி தொழிலாளி பலி