×

மகிழ்ச்சியில் மதுபிரியர்கள் புதுச்சேரியில் மதுபானங்கள் மீதான கோவிட் வரி ரத்து அதிரடியாக விலை குறைப்பு

புதுச்சேரி,  ஏப். 9:  புதுவையில் கடந்த 2020 மார்ச் மாதத்தில் கொரோனா தொற்று பரவ துவங்கியதால்  ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பரவலை தடுக்கும் நோக்கில் மதுபானக் கடைகள்,  மதுபார்கள் மூடப்பட்டன. 2 மாதங்களுக்கு பிறகு மே 24ம் தேதி மீண்டும்  மதுக்கடைகளை திறக்க அரசு அனுமதித்தது. அப்போது மதுபானங்கள் மீது கொரோனா வரி  விதிக்கப்பட்டது. இந்த வரிவிதிப்பு முதலில் ஆகஸ்ட் மாதம் வரை இருந்தது.  இதையடுத்து நவம்பர் 30 வரை சிறப்பு கலால் வரி  நீட்டிக்கப்பட்டது.  இதனிடையே நவம்பர் 29ம்தேதி கொரோனா வரியை நீக்க அரசு தரப்பில் கோப்பு  அனுப்பப்பட்டது. ஆனால் இதனை கிரண்பேடி ஏற்கவில்லை. மேலும் ஜனவரி 31ம்தேதி  வரை நீட்டிக்கப்பட்டது.  இதனால் புதுவையில் தமிழகத்திற்கு இணையாக  மதுபானங்களின் விலை உயர்ந்தது.விலை அதிகரிப்பால் மதுபான  விற்பனையும் சரிந்தது. இதனால், வருவாய் குறைந்தது. இதன் காரணமாக கொரோனா  வரியை நீக்க வேண்டுமென அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. மார்ச்  31ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டது.  இந்த காலக்கெடு  முடிவடைந்த தருவாயில், கிரண்பேடி மாறிவிட்டதால் மதுபானங்கள் மீதான கோவிட்  வரி ரத்தாகும் என மது பிரியர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இந்த வரி மேலும்  நீட்டிக்கப்படுவதாக கலால் துறை அறிவித்தது. அதில் மறு உத்தரவு வரும் வரை  தொடர்ந்து மதுபானங்கள் மீது சிறப்பு கலால் வரி வசூலிக்கப்படும் என  தெரிவிக்கப்பட்டிருந்தது.

 இந்த நிலையில் புதுச்சேரி கலால்துறை துணை  ஆணையர் சுதாகர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதுச்சேரி  யூனியன் பிரதேசத்தில் மதுபானங்கள் மீதான கோவிட் சிறப்பு வரி 2021, ஏப்ரல்  7ம்தேதியுடன் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார். இதன்மூலம் புதுச்சேரி  மாநிலத்தில் மதுபானங்கள் விலை மீண்டும் அதிரடியாக குறைந்துள்ளது. நேற்று  மாலை முதல் இது அமலுக்கு வந்்தது. 2021 சட்டமன்ற பொதுத் தேர்தல் நடந்து  முடிந்த நிலையில் கலால்துறையின் இந்த அறிவிப்பு மதுபிரியர்களை  மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழகத்துக்கு நிகராகவும், சில சரக்குகள் அதைவிட அதிக விலையிலும் கோவிட் வரி விதிப்பால் புதுச்சேரியில்  விற்கப்பட்டது. வரி அதிரடியாக ரத்து செய்யப்பட்டதால், பழைய விலைக்கே  கிடைக்கும் என்பதால் புதுச்சேரிக்கு தமிழகத்தில் இருந்து குடிமகன்கள் படையெடுப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  கோவிட்-19 பெருந்தொற்றின்  2வது அலை வீசத் தொடங்கியுள்ள நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகையும்  இதன்மூலம் அதிகரித்து மாநிலத்தின் வருவாய் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோப்புக்கு கவர்னர் ஒப்புதல்
புதுச்சோி துணைநிலை ஆளுநருக்கு, இந்தியத் தேர்தல் ஆணைய அனுமதியுடன்,  கலால்துறையில் இருந்து ஏப்ரல் மாதம் 7ம்தேதி முதல் கொரோனா சிறப்பு வரியை ரத்து செய்வது குறித்த கோப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  கோப்புக்கு கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்தார். இந்த ஒப்புதலைத் தொடர்ந்து, கலால் துறை மூலம் ஒரு அரசாணையும் வெளியிடப்பட்டது. அவ்வரசாணையில், கொரோனா சிறப்பு வரி ரத்து செய்யப்பட்டு,  வரி விதிப்பிற்கு முன்னதாக இருந்த விலையே நேற்று (08-04-2021) முதல்  மீண்டும் அமல்படுத்தப்படும்.  மேலும்  அனைத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் மதுபானக் கடைகள், வியாபாரிகள்,  விடுதிகளில் பணிபுரியும் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் குறிப்பாக எல்லையோரக்  கடைகள் இதனை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும். அவ்வாறு கடைபிடிப்பவர்களை  மட்டுமே மதுபானக் கடைகள் மற்றும் விடுதிகளில் அனுமதிக்க வேண்டுமென கவர்னர்  மாளிகை அலுவலகம் தெரிவித்துள்ளது.

Tags : Puducherry Govt ,
× RELATED சனிப்பெயர்ச்சி குறித்து ஆலோசனை தன்னை...