×

நாகர்கோவிலில் 12 அறைகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 24 மணிநேரமும் போலீஸ் பாதுகாப்பு

நாகர்கோவில், ஏப்.9: குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி மக்களவை மற்றும் 6 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 12 அறைகளில் வைக்கப்பட்டு 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தல், 6 சட்டமன்ற தொகுதிகளான கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகியவற்றிற்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 6ம் தேதி நடந்தது. இந்த தேர்தலில் பதிவான மின்னணு வாக்கு இயந்திரங்களை பாதுகாப்பாக அந்தந்த தொகுதிக்கு தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் அறைகள் அருகாமையிலுள்ள பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவிலில் கோணம் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியின் கீழ் தளத்தில் கன்னியாகுமரி தொகுதிக்கு உள்பட்ட பாராளுமன்றம், கன்னியாகுமரி சட்டமன்ற தேர்தல் வாக்குகள் எண்ணும் மையமும், முதல் தளத்தில், நாகர்கோவில் தொகுதிக்குட்பட்ட பாராளுமன்றம், சட்டமன்ற தேர்தல் வாக்குகள் எண்ணும் மையமும், 2வது தளத்தின் வலது பக்கம் குளச்சல் தொகுதிக்கு உள்பட்ட பாராளுமன்றம், சட்டமன்ற தேர்தல் வாக்குகள் எண்ணும் மையமும், இடது பக்கம் கிள்ளியூர் தொகுதிக்கு உள்பட்ட பாராளுமன்றம், சட்டமன்ற தேர்தல் வாக்குகள் எண்ணும் மையமும், கீழ் தளத்தின் கீழுள்ள தளத்தில் பத்மநாபபுரம் மற்றும் விளவங்கோடு தொகுதிக்குட்பட்ட பாராளுமன்ற தேர்தல் வாக்குகள் எண்ணும் மையமும் அமைக்கப்பட்டுள்ளது.

அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களின் அருகாமையில், வாக்கு எண்ணும் இயந்திரங்கள் வைப்பறையும் அமைக்கப்பட்டு உள்ளது. கோணம் அரசு தொழில்நுட்ப கல்லூரியின் முதல் தளத்தில், பத்மநாபபுரம், விளவங்கோடு தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற தேர்தல் வாக்குகள் எண்ணும் மையமும், வாக்கு எண்ணும் மையங்களின் அருகாமையில், வாக்கு எண்ணும் இயந்திரங்கள் வைப்பறையும் அமைக்கப்பட்டுள்ளது. 06.04.2021 நடந்த தேர்தலில் பதிவான வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் கொண்டுவரப்பட்டு, அந்தந்த தொகுதிக்கு உள்பட்ட பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டன. அந்த வகையில் சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு இயந்திரங்கள் 6 அறைகளிலும், பாராளுமன்ற தொகுதிக்கான மின்னணு இயந்திரங்கள் சட்டமன்ற தொகுதி வாரியாக 6 அறைகளிலும் என்று மொத்தம் 12 அறைகளில் மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில் மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதியை போலீசார் 24 மணிநேரமும் ரோந்து சுற்றி வருகின்றனர்.

Tags : Nagercoil ,
× RELATED நாகர்கோவிலில் சுற்றி திரிந்த 13 நாய்களுக்கு கருத்தடை