மக்களவை இடைத்தேர்தல் - சட்டமன்ற தேர்தல் குமரியில் 4.90 லட்சம் பேர் வாக்களிக்கவில்லை

நாகர்கோவில், ஏப்.9: குமரி மாவட்டத்தில் கடந்த 6ம் தேதி நடைபெற்ற தேர்தலில் மொத்தம் 68.79 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலுக்கும், கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளின் பொதுத்தேர்தலுக்கும் கடந்த 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் வாக்குப்பதிவு நிறைவுபெற்ற 7 மணி நிலவரம் அடிப்படையில் வாக்குப்பதிவு சதவீதம் வெளியிடப்பட்டிருந்த நிலையில் இறுதிகட்ட நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி மொத்தம் 68.79 சதவீத வாக்குகள் குமரி மாவட்டத்தில் பதிவாகியுள்ளன.குமரி மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்றபோதிலும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்த 4 லட்சத்து 90 ஆயிரத்து 444 வாக்காளர்கள் வாக்களிக்க வாக்குச்சாவடிகளுக்கு வருகை தரவில்லை. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உள்ள அச்சம், வெயிலின் தாக்கம், வாக்காளர்களுக்கு பூத் சிலிப் முறையாக சென்று சேராததது உள்ளிட்ட காரணங்கள் வாக்குபதிவு சதவீதம் குறைய காரணம் என்று கூறப்படுகிறது.வாக்குப்பதிவு முழுமையான நிலவரம் நேற்று வெளியானது.

* கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 92 ஆயிரத்து 943 வாக்காளர்களில் 2 லட்சத்து 19 ஆயிரத்து 643 பேர் வாக்களித்துள்ளனர். இது 74.98 சதவீத வாக்குப்பதிவு ஆகும்.

* நாகர்கோவில் தொகுதியில் 2 லட்சத்து 70 ஆயிரத்து 402 வாக்காளர்கள் உள்ள நிலையில் 1 லட்சத்து 81 ஆயிரத்து 133 பேர் வாக்களித்துள்ளனர். இது 66.99 சதவீத வாக்குப்பதிவு ஆகும்.

* குளச்சல் தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 68 ஆயிரத்து 218 வாக்காளர்கள் உள்ள நிலையில் 1 லட்சத்து 80 ஆயிரத்து 424 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இது 67.27 சதவீத வாகுப்பதிவு ஆகும்.

* பத்மநாபபுரம் தொகுதியில் 2 லட்சத்து 39 ஆயிரத்து 36 வாக்காளர்கள் உள்ள நிலையில் 1 லட்சத்து 67 ஆயிரத்து 517 பேர் வாக்களித்துள்ளனர். இது 70.08 சதவீதம் ஆகும்.

* விளவங்கோட்டில் 2 லட்சத்து 47 ஆயிரத்து 853 பேர் வாக்காளர்களாக இருந்த நிலையில் 1 லட்சத்து 65 ஆயிரத்து 651 பேர் வாக்களித்துள்ளனர். இது 66.83 சதவீதம் ஆகும்.

* கிள்ளியூரில் 2 லட்சத்து 53 ஆயிரத்து 199 வாக்காளர்கள் இருந்த நிலையில் 1 லட்சத்து 66 ஆயிரத்து 839 பேர் வாக்களித்துள்ளனர். இது 65.89 சதவீதம் ஆகும்.

அந்த வகையில் குமரி மாவட்டம் முழுவதும் 15 லட்சத்து 71 ஆயிரத்து 651 வாக்காளர்கள் உள்ள நிலையில் 10 லட்சத்து 81 ஆயிரத்து 207 பேர் வாக்களித்துள்ளனர். இது 68.79 சதவீத தேர்ச்சி ஆகும்.

2019 மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் வாக்குபதிவு சதவீதம் 69.80 சதவீதம் ஆகும். அப்போது சட்டமன்ற தொகுதி வாரியாக  கன்னியாகுமரியில் அதிகபட்சமாக 73.97 சதவீத வாக்குகள் பதிவாகின. மொத்தம் 2,79,125 வாக்காளர்களில் 2,06,461 பேர் வாக்களித்திருந்தனர். நாகர்கோவில் தொகுதியில் 67.18 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. மொத்தம் 2,53,798 வாக்காளர்களில் 1,70,497 பேர் வாக்களித்திருந்தனர். குளச்சல் தொகுதியில் மொத்தம் 69.12 சதவீத வாக்குகள் பதிவாகின. மொத்தம் 2,53,703 வாக்காளர்களில் 1,75,372 பேர் வாக்களித்திருந்தனர். பத்மநாபபுரம் தொகுதியில் 72.16 சதவீதம் வாக்குகள் பதிவாகின. மொத்தம் 2,26,363 வாக்காளர்களில் 1,63,353 பேர் வாக்களித்திருந்தனர். விளவங்கோடு தொகுதியில் மொத்தம் 68.21 சதவீத வாக்குகள் பதிவாகின. மொத்தம் 2,40,876 வாக்காளர்களில் 1,64,312 பேர் வாக்குபதிவு செய்திருந்தனர். கிள்ளியூர் தொகுதியில் 67.78 சதவீத வாக்குகள் பதிவாகின. 2,39,644 வாக்காளர்களில் 1,62,437 பேர் வாக்களித்தனர். அந்த வகையில் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் அந்த தேர்தலில் 14,93,509 வாக்காளர்களில் 10,42,432 பேர் வாக்களித்திருந்தனர். இது 69.80 சதவீதம் ஆகும்.

Related Stories:

>