தூத்துக்குடியில் சாலை விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு காரில் அனுப்பிவைத்த கலெக்டர்

தூத்துக்குடி, ஏப். 9:  தூத்துக்குடியில் சாலை விபத்தில் காயமடைந்த  வாலிபர்களை மீட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தனது காரில் ஏற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தார். தூத்துக்குடி சுந்தரவேல்புரத்தை சேர்ந்தவர் சிவசக்தி (20). இவரும், இவரது நண்பரான முக்காணியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (21) என்பவரும் நேற்று மாலை திருச்செந்தூர் ரோடு சத்யா நகர் பாலம் அருகே ஒரே பைக்கில் வந்துகொண்டிருந்தனர். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையின் மத்தியில் இருந்த மின் கம்பத்தில் மோதியது. இந்த பைக்கில் படுகாயமடைந்த இருவரும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த கலெக்டர் செந்தில்ராஜ்,  இருவரையும் மீட்டதோடு தனது காரில் ஏற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். மேலும் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கும்படி மருத்துவமனை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவருக்கும் டாக்டர்கள்  தீவிர சிகிச்சை மேற்கொண்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி சிவசக்தி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>