×

கோவில்பட்டி அருகே கண்மாயில் குப்பை கொட்டவந்த லாரியை சிறைபிடித்து போராட்டம் கிராம மக்கள் ஆவேசம்

கோவில்பட்டி, ஏப். 9: கோவில்பட்டி அருகே மந்திதோப்பு கிராமம், பெரியகுளம் கண்மாயில் குப்பை கொட்ட வந்த லாரிகளை சிறை பிடித்த மக்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவில்பட்டி அடுத்த மந்தித்தோப்பு கிராமத்தில் அமைந்துள்ள பெரியகுளம் கண்மாய், விவசாயத்தின் ஆதாரமாகவும், அப்பகுதி மக்கள், கால்நடைகளின் தாகத்தையும் தீர்த்து வருகிறது. இந்நிலையில் கோவில்பட்டி நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து குப்பைக் கழிவுகள், மருந்து கழிவுகள் உள்ளிட்டவை லாரிகளில் கொண்டுவந்து இங்குள்ள கண்மாயின் ஒரு பகுதி அருகே கடந்த சில நாள்களாக கொட்டப்பட்டு வந்ததாம். இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தபோதும் குப்பை கொட்டுவது நின்றபாடில்லை. இதனால் ஆவேசமடைந்த கிராம மக்கள், வழக்கம்போல் கண்மாயில் நேற்று குப்பைக் கழிவுகளை கொட்ட வந்த லாரி, ஜேசிபி உள்ளிட்ட வாகனங்களை சிறைபிடித்து தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும் இவ்வாறு குப்பைக் கழிவுகளை கண்மாயில் கொட்டுவதால் நீர்வள ஆதாரம் பாதிக்கப்படுவதோடு சுகாதார சீர்கேடும், கால்நடைகளுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுவதாக குற்றம்சாட்டினர்.  தகவலறிந்து விரைந்துவந்த லாரியின் ஒப்பந்ததார் சமரசத்தில் ஈடுபட்டார். அதில், இங்கு கொட்டி வந்த குப்பைகள் உடனடியாக அகற்றப்படும் எனக் கூறியதையடுத்து, போராட்டக்குழுவினர் கலைந்து சென்றனர். அதையடுத்து ஒப்பந்தகாரர் முன்னிலையில் ஜேசிபி உதவியுடன் அங்கிருக்கும் குப்பைக் கழிவுகள் அப்புறப்படுத்தும் பணி நடந்தது.

Tags : Kovilpatti ,
× RELATED கோவில்பட்டியில் வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு..!!