×

சாயர்புரத்தில் ஒரு வாரமாக தொடரும் அவலம் குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர் சீரமைக்க கோரி நூதன போராட்டம்

ஏரல்,  ஏப். 9:  சாயர்புரத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு சீரமைக்கப்படாததால் அதில் இருந்து குடிநீர் வீணாகி வெளியேறுகிறது. இதை சரிசெய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள்  வலியுத்தியுள்ளனர். இதனிடையே இதை சீரமைக்கக் கோரி காங்கிரஸ் பிரமுகர்  நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். ஏரல் அருகே  மங்கலகுறிச்சி தாமிரபரணி ஆற்றில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்  சார்பில் அமைக்கப்பட்ட உறை கிணறுகளில் இருந்து சேகரிக்கப்படும் குடிநீரானது பெருங்குளம், பண்டாரவிளை,  சாயர்புரம் வழியாக சாலையோரம் அமைக்கப்பட்ட ராட்சத பைப்லைன் மூலம் தூத்துக்குடிக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதேபோல் சாயர்புரம் கூட்டுக்குடிநீர் திட்டத்திலும் இவ்வழியாக குழாய்கள் பதித்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதில் சாயர்புரம் மெயின் பஜாரில் மகளிர் பள்ளி அருகே செல்லும் பைப்லைனில் கடந்த ஒருவாரத்திற்கு முன்னர் ஏற்பட்ட உடைப்பு இதுவரை சரிசெய்யப்படவில்லை. இதனால் அதில் இருந்து வீணாக வெளியேறும் குடிநீர், சாலையோரம் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவதோடு சாலையோரம் தேங்கும் குடிநீரில் கழிவுநீரும் கலக்கும்போது கொசுக்கள் உற்பத்தியாகி உள்ளதால் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளதாக குற்றம்சாட்டும் மக்கள், விரைவில் சீரமைக்க வலியுறுத்தியுள்ளனர்.

 இந்நிலையில் இக்கோரிக்கையை வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் அமிர்தராஜ் (37)  என்பவர், குளம் போல் தேங்கிநிற்கும் குடிநீரில் சோப் போட்டு குளிக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது சாலையோர வழியாக சென்ற  நூற்றுக்கணக்கானோர் இதை வேடிக்கை பார்த்து சென்றனர். அதில் சிலர்  இப்படி  தண்ணீர் வீணாக செல்வதை இன்னும் அதிகாரிகள் சீரமைக்காமல் போட்டுள்ளனரே என்று  ஆதங்கப்பட்டு சென்றனர். இவ்வாறு சாயர்புரத்தில் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் வீணாக வெளியேறும் குடிநீர் சாலையோரம் குளம்போல் தேங்கி நிற்கும் நிலையில் இதை சீரமைக்க வலியுறுத்தி நடந்த இந்த நூதன போராட்டத்தால் பரபரப்பு நிலவியது.

Tags : Sayarpuram ,
× RELATED சிவத்தையாபுரத்தில் திமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்