சித்திரை விசு திருவிழாவை முன்னிட்டு குற்றாலநாதர் கோயிலில் இன்று தேரோட்டம்

தென்காசி, ஏப்.9:குற்றாலம் குற்றாலநாதசுவாமி கோயிலில் சித்திரை விசு திருவிழாவை முன்னிட்டு இன்று காலை தேரோட்டம் நடக்கிறது. இதற்காக தேர் அழகுபடுத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளது.பஞ்ச சபைகளில் ஒன்றான சித்திர சபையை உடைய குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை விசு திருவிழா கொண்டாடப்படும். இந்த ஆண்டு திருவிழா கடந்த 5ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனைகள் நடந்தது. விழாவில் தினமும் காலை, மாலையில் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடந்து வருகிறது. நேற்று பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நடந்தது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை 9 மணிக்கு நடக்கிறது. முதலில் விநாயகர், முருகர், குற்றாலநாதர், குழல்வாய்மொழி அம்பாள் ஆகிய 4தேர்கள் ஒன்றன்பின் ஒன்றாக இழுக்கப்படுகிறது. இதற்காக தேர்கள் அனைத்தும் சுத்தப்படுத்தப்பட்டு வண்ண ஆடைகளால் அலங்கரிக்கப்பட்டு வாழைத்தோரணம் கட்டி தயார் நிலையில் உள்ளது. 11ம்தேதி காலை 9 மணிக்கும், இரவு 7 மணிக்கும் நடராஜருக்கு தாண்டவ தீபாராதனையும், 13ம்தேதி சித்திர சபையில் நடராஜமூர்த்திக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனையும் நடக்கிறது. 14ம்தேதி சித்திரை விசு தீர்த்தவாரி நடக்கிறது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர்கள் சங்கர், கண்ணதாசன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories:

>